20 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டதால் அதிமுக மீது பாஜ கடும் அதிருப்தி: குறைவான இடங்களே கிடைத்ததால் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்த முடியாமல் திணறல்

சென்னை: அதிமுக கூட்டணியில் தேர்தல் செலவை முழுமையாக ஏற்பதாகக் கூறி பாஜகவுக்கு 20 சட்டப்பேரவை தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் நள்ளிரவில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏராளமான நிர்வாகிகள் சீட் கேட்டுள்ள நிலையில் தொகுதிகளை குறைத்து வழங்கியிருப்பதால், அதிமுக தலைமை மீது பாஜ தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நிர்வாகிகளை சமாளிக்க முடியாமல் பாஜக மாநில தலைமையும் திணறி வருகிறது.  தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை பாமகவுடன் மட்டும் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்திருந்தது. அந்த கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது.

60 சீட்டுகள் வேண்டும் என்று பாஜ முதலில் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து சென்னை வந்த அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் தருவதாக கூறினர். அப்போதுதான் எதிர்பாராதவிதமாக அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா கூறினார். அமமுகவுக்கு தொகுதிகளை நாங்கள் ஒதுக்கிக்கொள்கிறோம் எனவே 40 சீட் வேண்டும் என்று அமித்ஷா இறங்கி வந்தார்.  கடந்த மக்களவை தேர்தலின்போது சுமார் 52 சட்டப்பேரவை தொகுதிகளில் கணிசமான வாக்குகளை அமமுக பெற்றது. இதனால் அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அதிமுகவுக்கு பாஜ தலைமை வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் அதிமுக தலைவர்கள் இதை ஏற்கவில்லை. இதனால் அதிமுக, பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் பாஜவுக்கு 26 தொகுதிகள் தர அதிமுக முன் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால், செலவுகளை பாஜகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். 20 தொகுதிகளை பெற்றால் நாங்கள் செலவு செய்கிறோம் என்று அதிமுக தலைவர்கள் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் பாஜக தலைவர்களோ 26 தொகுதிகள் கொடுத்தால் போதும் என்று கூறினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுக்கிர ஓரை எனப்படும் நல்ல நேரமாகும். ஜெயலலிதாவுக்கு பிடித்த எண் 6. எனவே இந்த நல்ல நேரத்தில் நேற்று அதிமுகவின் 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இது பாஜகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பாஜக இழுத்தடிப்பதால்தான் அதிமுக தலைமை மிரட்டுவதற்காக இந்த பட்டியலை யாரிடமும் சொல்லாமல் வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதே நல்ல நாளில் பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க அதிமுக திட்டமிட்டது. ஆனால், தமிழக பாஜ பொறுப்பாளர் சி.டி.ரவி ஒசூர் மற்றும் நீலகிரியிலும், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நெல்லை, தூத்துக்குடியிலும் சுற்றுப் பயணத்தில் இருந்தனர்.

இதனால், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் மற்றும் சி.டி.ரவி ஆகியோருடன் அதிமுக தலைவர்கள் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேமுதிகவுக்கு 10 சீட்டுகள் கொடுக்க நினைத்தோம். மேலும் 5 சீட் கொடுக்க வேண்டி உள்ளதால், நீங்கள் கொஞ்சம் இறங்கி வாருங்கள். உங்களுக்கு 26க்கு பதில் 20 சீட் தருகிறோம். கன்னியாகுமரி எம்பி தொகுதியில் நீங்கள் மீண்டும் போட்டியிடலாம். செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.  அமித்ஷா இன்று கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கு பிரசாரத்துக்கு வருகிறார். அதற்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்க வேண்டும் என்று அமித்ஷாவும் கூறியிருந்தார். இதனால், நீண்ட இழுபறிக்கு பின் பாஜ 20 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் எல்.முருகன், ஆன்லைனிலேயே கையெழுத்திட்டுள்ளனர்.  

மேலும் 20 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தர வேண்டும் என்று பாஜ தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை அதிமுக தலைவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி பாஜகவுக்கு ஒதுக்க இருக்கும் சில தொகுதிகள் விவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் கே.டி.ராகவனுக்கு மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர், வினோஜூக்கு துறைமுகம், குஷ்புவுக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகள் வழங்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்காக கிணத்துக்கடவு அல்லது அரவக்குறிச்சி, வானதி சீனிவாசனுக்காக கோவை தெற்கு அல்லது திருப்பூர் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறதாம். நடிகை கவுதமிக்கு ராஜபாளையம், நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 தொகுதிகள், நரேந்திரனுக்கு ஓசூர், கருப்பு முருகானந்தத்திற்கு தஞ்சை, கேசவனுக்கு காஞ்சிபுரம் என 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 18 தொகுதிகள் வரை எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு விட்டது.

2 தொகுதிகளில் மட்டுமே பிரச்னை உள்ளது. இந்த தொகுதிகளை பாமக கேட்பதாக கூறப்படுகிறது. இதுவும் ஓரிரு நாளில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டதால் பாஜ கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்த முடியாமல் மேலிடம் திணறி வருகிறது. அதிமுக தலைவர்கள் நேற்று முன்தினம் கடைசி நேரத்தில் கழுத்தை பிடித்து நெருக்குவதுபோல போனிலேயே பேசி ஒப்பந்தத்தை முடித்தது பாஜ தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

* அமமுகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும். நாங்கள் தொகுதிகளை ஒதுக்கிக்கொள்கிறோம் என அமித்ஷா கூறியதால் 40 சீட்டுக்கு இறங்கி வந்தனர்.

* கடைசிகட்ட பேச்சுவார்த்தையில் பாஜவினர் 26 தொகுதிகளை கொடுங்கள் போதும் என்றனர்.

* நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜ 20 தொகுதிகளுக்கு சம்மதித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Related Stories: