தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து.!!!

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இன்று சென்னை அண்ணா அறிவாலாயத்தில் திமுக-மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், திமுக உடன் மதிமுகவுக்கு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணி: அதிமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள், பாரதிய ஜனதா கட்சிக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கீடு செய்தது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>