பழவந்தாங்கலில் பரபரப்பு: மருத்துவ கழிவுகளை கொட்டிய குப்பை லாரிகள் சிறைபிடிப்பு

ஆலந்தூர்: சென்னை பழவந்தாங்கல், நேரு நெடுஞ்சாலையையொட்டி பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு குப்பை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அங்கு கடந்த 10 ஆண்டுகளாக குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தை அப்பகுதி இளைஞர்கள் சீரமைத்து, விளையாட்டு மைதானமாக தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விளையாட்டு மைதானத்தில் கடந்த 10 நாட்களாக லாரிகள் மூலம் குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று மாலை, கோபி என்பவர் தலைமையில் திமுக பகுதி செயலாளர் என்.சந்திரன், பி.வி.நகர் நலச்சங்க நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு குப்பை லாரிகளை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கன்டோன்மென்ட் போர்டு அதிகாரிகள் வந்து, இன்று மட்டும் குப்பை கொட்ட அனுமதி தாருங்கள்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி கூறினர். இந்த உறுதிமொழியை ஏற்று மறியலை கைவிட்டனர். இதற்குமேல், மீண்டும் இங்கு குப்பை கொட்ட லாரிகள் வந்தால், நாங்கள் அனைவரும் சாலைமறியலில் ஈடுபடுவோம் என அதிகாரியிடம் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு சுமார் 4 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>