வெளி மாநிலங்களிலிருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது தேங்காய்..கடமலை-மயிலை ஒன்றியத்தில் விவசாயிகள் கவலை

வருசநாடு: வெளிமாநிலங்களிலிருந்து வரத்து அதிகரிப்பால், தேங்காய் விலை குறைந்துள்ளது. இதனால், கடமலை-மயிலை ஒன்றிய  விவசாயிகள் கவலையில் உள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், தும்மக்குண்டு ஆகிய பகுதிகளில்  பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன.

இப்பகுதியில் விளையும் தேங்காய்களை காங்கேயம், திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு  கொப்பரைத் தேங்காய்காகவும் தேனி, சின்னமனூர், ஆண்டிபட்டி, கம்பம்,  மதுரை ஆகிய பகுதிகளுக்கு சில்லறை விற்பனைக்கும் அனுப்பி  வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய்  விலை குறைந்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயி லோகேந்திரன் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளையும் தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.  ஆனால், கடந்த சில நாட்களாக தேங்காய் ஒன்றின் விலை ரூ.14 முதல் 15 வரை விற்பனையாகிறது. கொப்பரை தேங்காய் ஒரு டன் ரூ.31 ஆயிரம்  வரை விற்கிறது. இதனால், விவசாயிகளுக்கு மிகுந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னை நல வாரியாம் மூலம் நிவாரணம் வழங்க வேண்டும்.  இதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: