முதுகுளத்தூரில் கண்மாய்கள் வற்றி விட்டதால் தண்ணீரின்றி கருகும் மிளகாய் பயிர்கள்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாயல்குடி: முதுகுளத்தூர் பகுதி கண்மாய்கள் வற்றி விட்டதால் மிளகாய் பயிர்கள்  தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் வேதனை  அடைந்துள்ளனர்.முதுகுளத்தூர் பகுதியில் பருவமழையை எதிர்பார்த்து கடந்த செப்டம்பர் மாதம் மிளகாய் நாற்றுகளை வளர்த்து வந்தனர். கடந்த அக்டோபர் கடைசியில்  வடகிழக்கு பருவமழை துவங்கியது. இதையடுத்து விவசாயிகள், இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் பயிர்களை பயிரிட்டனர்.

 பயிர்கள்  நன்றாக வளர்ந்து பூ பூத்து காய்க்கும் தருவாயில் இருந்தது.கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை தொடர்மழை பெய்ததால் வயல்களில் மழைத்தண்ணீர் தேங்கியது. இதனால் சுமார் 1,500 ஏக்கர் மிளகாய்  செடிகள் அழுகி நாசமானது. தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றி, மீண்டும் மிளகாய் நாற்றுகளை நட்டு பராமரித்தனர்.

இந்நிலையில் தற்போது தண்ணீரின்றி, முதுகுளத்தூர் அருகேயுள்ள தாழியரேந்தல், மட்டியரேந்தல், கடம்போடை, பூசேரி, செங்கப்படை,  பொக்கரனேந்தல், இளங்காக்கூர், உலையூர், நெடியமாணிக்கம், கருபிள்ளைமடம், சேமனூர், அலங்கானூர், பொசுக்குடிபட்டி, மகிண்டி, சவேரியார்பட்டிணம்  உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட மிளகாய் பயிர்கள் கருகி வருகிறது.

இதுகுறித்து மிளகாய் விவசாயிகள் கூறும்போது, ‘போதிய மழை, தண்ணீர் இல்லாத செப்டம்பர் மாதத்தில் டேங்கரில் விலைக்கு தண்ணீர் வாங்கி  ஊற்றி மிளகாய் நாற்றுகளை வளர்த்து வந்தோம். வயலில் செடிகள் நடப்பட்டு நன்றாக வளர்ந்து வந்த நிலையில் அப்போது பெய்த தொடர்மழையின்  காரணமாக மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. பின்னர் குட்டை, கண்மாயில் கிடந்த தண்ணீரை நம்பி மீண்டும் பயிரிட்டோம்.

ஆனால் தற்போது கடும் வெயிலின் காரணமாகவும் குட்டை, கண்மாய் தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது. இரண்டு மடங்கு செலவு செய்து  பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்ட பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகி வருகிறது. மிளகாய் காய்த்து, பழம் வந்த நிலையில் கருகுவது வேதனையாக  உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அரசு தான் எங்களுக்கு நிவாரணம் வழங்கி உதவ வேண்டும்’ என்றனர்.

Related Stories: