மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வலியப்படுக்கை பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு

குளச்சல் : குமரி  மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன்  கோயிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள்  இருமுடிக்கட்டி வந்து பகவதியம்மனை  வழிபடுவதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு  மாசிக்கொடை விழா  10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடப்பது  வழக்கம். இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா கடந்த 28ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நடந்து வருகிறது. நேற்று  (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மகா பூஜை என்னும்  வலியபடுக்கை பூஜை நடந்தது. வலியபடுக்கை பூஜை என்பது நள்ளிரவு அம்மனுக்கு  மிகவும்  பிடித்தமான உணவு பதார்த்தங்கள், கனி வகைகள் ஆகியவற்றை அம்மன்  முன் பெருமளவில்  படைத்து வழிபடுவதாகும்.

இந்த வழிபாடு  மாசிக்கொடையின் 6ம் நாளன்றும், மீன பரணிக்கொடையன்றும், கார்த்திகை  மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்றும் வருடத்திற்கு  3 முறை நடக்கும்  என்பதால் இந்த வழிபாடு முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இதனை  முன்னிட்டு நேற்று  காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. அதைத்  தொடர்ந்து 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு  தீபாராதனை, காலை 9.30  மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, நண்பகல் 12 மணிக்கு பருத்திவிளை  இந்து சமுதாய பேரவை சார்பில்  யானை மீது சந்தனக்குடம் பவனி, மதியம் 1 மணிக்கு  உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

 மாலை 6.15 மணிக்கு குளச்சல் கணேசபுரம் அடைக்கலம் தந்த  பிள்ளையார் கோயிலிலிருந்து மாவிளக்கு ஊர்வலம், அம்மனுக்கு சந்தன காப்பு   பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை  இரவு 8.30 மணிக்கு கதகளி, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு   மேல் 1 மணிக்குள் மகா வலியபடுக்கை பூஜை ஆகியவை நடந்தது. வலியபடுக்கை பூஜையை முன்னிட்டு நண்பகல்  முதல் பக்தர்கள் கூட்டம்  அதிகமாக காணப்பட்டது.

Related Stories: