ஓராண்டில் 90 சதவீதம் அதிகரிப்பு: சன்பிளவர் ஆயில் லிட்டர் ரூ.150ஆக உயர்வு...பொதுமக்கள் அதிர்ச்சி

சேலம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி குறைந்ததால் சன்பிளவர் ஆயில் லிட்டர் ரூ.135ஆக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் 90 சதவீதம் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலக அளவில் பிரான்ஸ், நார்வே, ஆஸ்திரிலேயா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் சன்பிளவர் ஆயில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு ஆயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த சில மாதமாக வெளிநாடுகளில் இருந்து சன்பிளவர் ஆயில் வரத்து குறைந்ததால் ஆயிலின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஆயில் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த தாவர எண்ணெய் வியாபாரிகள் கூறியதாவது: பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக, அங்கு சன்பிளவர் ஆயில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் வழக்கமாக ஐந்து கப்பல்களில் எண்ணெய் வரும். கடந்த சில மாதமாக தமிழகத்திற்கு ஒன்றிரண்டு கப்பல் மட்டுமே வருகிறது.

 இதன் காரணமாக சன்பிளவர் ஆயிலின் விலை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் ஒரு லிட்டர் சன்பிளவர் ரூ.85க்கு விற்றது. ஓராண்டில் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று நிலவரப்படி லிட்டர் ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. ஓராண்டில் ஆயிலின் விலை 90 சதவீதம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை நீடித்தால், இன்னும் ஓரிரு வாரத்தில் சன்பிளவர் ஆயிலின் விலை நூறு சதவீதம் உயர வாய்ப்புள்ளது. எனவே, ஆயிலை அதிகளவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எண்ணெய் வியாபாரிகள் கூறினர்.

ரேஷனில் 3 லிட்டர் பாமாயில்

ஆயிலின் விலை படிப்படியாக உயர்ந்து வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை அதிகரிப்பால் 4 முதல் 5 லிட்டர் வாங்கியவர்கள் 2 முதல் 3 லிட்டராக குறைந்து கொண்டனர். ஆயிலின் விலை அதிகரிப்பால், ரேஷனில் வழங்கும் பாமாயிலை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். ரேஷனில் ஒரு லிட்டர் பாமாயில் ₹25க்கு வழங்கப்படுகிறது. இதை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆயிலின் விலை 90 சதவீதம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் சிரமத்தை போக்க ரேஷனில் மாதத்திற்கு 3 லிட்டர் பாமாயில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: