சேலம் விருத்தாசலம் ரயில் சேவை இல்லாததால் புது மளிகைப்பொருட்களின் விற்பனை 50 சதவீதம் சரிவு: வியாபாரிகள் தகவல்

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை, லீ பஜாருக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் புது மளிகைப்பொருட்களின் வரத்து தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றால்  விருத்தாசலம் ரயில் சேவை இல்லாததால், வழக்கமான வியாபாரத்தில் இருந்து 50 சதவீதம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் துவரை, உளுந்து, மிளகாய், கொத்தமல்லி, பச்சைபயிர்,

கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, பூண்டு, ஏலக்காய், முந்திரி, திராட்சை, கசாகசா, பட்டை, லவங்கம், வெந்தயம், சோம்பு, தட்டைபயிர், அவரைக்கொண்டை, மிளகு, கடுகு உள்ளிட்டவைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பச்சைபயிர், உளுந்து, தட்டைபயிர், அவரைக்கொட்டை உள்ளிட்ட சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த இடங்களில் ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மாதத்தில் பயிர்கள் அறுவடை செய்யப்படும். விவசாயிகள் தானிய வகைகளை சுத்தம் செய்து,

இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். நடப்பாண்டு கடந்த பிப்ரவரி 2வது வாரத்தில் இருந்து, புது தானிய வகைகள் மற்றும் மளிகைப்பொருட்களின் வரத்து தொடங்கியுள்ளது. சேலம் பால் மார்க்கெட், லீ பஜார், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகளில், புது மளிகைப்பொருட்கள் வாங்க இந்த சீசனில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், நடப்பாண்டு எதிர்பார்த்த அளவில் வாடிக்கையாளர்கள் கூட்டம் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை மளிகை மொத்த வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 2வது வாரத்தில், புது மளிகைப்பொருட்களின் வரத்து தொடங்கும். நடப்பாண்டு புது மளிகைப்பொருட்களின் வரத்து, 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது படிப்படிப்பாக அதிகரித்து, ஏப்ரல் முதல் வாரத்தில் 80 சதவீதமாகி, ஏப்ரல் கடைசியில் வரத்து 10 சதவீதமாக குறைந்து விடும். வரத்து தொடங்கியுள்ள போதிலும், எதிர்பார்த்த அளவில் வியாபாரம் நடக்கவில்லை. கடந்தாண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்கள் கையில் பணம் இருப்பு குறைந்துள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சேலம்-விருத்தாசலம் ரயிலில் புது மளிகைப்பொருட்கள் வாங்க வருவார்கள். கொரோனா தொற்று காரணமாகவும், இந்த வழித்தடம் மின்தடமாக மாற்றப்பட்டு வருவதாலும், 11 மாதத்திற்கு மேலாக ரயில்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாகவே, நடப்பாண்டு 50 சதவீதம் வியாபாரம் குறைந்துள்ளது.

வரும் 15ம் தேதி முதல் சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு மளிகை பொருட்களின் விற்பனை சூடுபிடிக்க வாய்ப்புள்ளது. தற்போது சேலம் மாநகரத்தை சேர்ந்தவர்களும், ஓமலூர், மேட்டூர், தாரமங்கலம் மற்றும் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டுமே, மளிகை பொருட்கள் வாங்க வருகின்றனர்.

நடப்பாண்டு துவரம் பருப்பு வரத்து குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு ₹60 முதல் ₹70க்கு விற்றது. ஆனால் நடப்பாண்டு ₹90 முதல் ₹100 என விற்கப்படுகிறது. அதேபோல் மிளகு வரத்து இல்லை. புளி வரத்து அதிகமாக உள்ளது. ஒரு கிலோ புளி ₹90 முதல் ₹120 வரையும், வத்தல் மிளகாய் ₹160 முதல் ₹180, உளுந்தம் பருப்பு ரூ.110, பாசிப்பருப்பு ரூ.100, கடலை பருப்பு ரூ.70 மிளகு ரூ.400 என்று விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பொருட்களின் நடப்பாண்டும் அதே விலையில் தான் விற்கப்படுகிறது. விலைவாசி உயர்வு என்பதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: