1000 ரூபாயை எட்டுகிறது சிலிண்டர் தொடர்ந்து உயரும் காஸ் விலையால் மண் அடுப்புக்கு அதிகரிக்கும் மவுசு

நெல்லை:  மார்ச் 6: மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பழைய மண் அடுப்பை பயன்படுத்தும் வழக்கம், கிராம மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் மண் அடுப்பு தயாரிப்பு பணியும் விறுவிறுப்படைந்து உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளில் சமையல் வேலைக்கு விறகுகளையே பயன்படுத்தி வந்தனர். இதற்காக மண் கொண்டு தயாரிக்கப்பட்ட சுடுமண் அடுப்புகள் பயன்படுத்தப்பட்டது.

 இதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு என்று தனிச்சுவையும், மனமும் உண்டு. மேலும் விறகு மூலம் கிடைக்கும் கரியை கூட அடுப்புகளில் எரிக்க பயன்படுத்தினர். இதிலிருந்து கிடைக்கும் சாம்பலை பாத்திரங்கள் துலக்கவும், பல் துலக்கவும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் நாகரீக வளர்ச்சியின் காரணமாக மண்ணெண்ணெய் மூலம் சமையல் அடுப்புகள் பயன்பாட்டுக்கு வந்தன. தொடர்ந்து காஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு வந்து பெரும்பாலான வீடுகளில் புழக்கத்தில் உள்ளது. தற்போது சில வீடுகளில் எலக்ட்ரிக் அடுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.

விறகு அடுப்புகள் மூலம் சமையல் செய்வதால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளால் சிரமத்திற்குள்ளாவதை தடுக்க கிராம மக்களுக்கு அரசு சார்பில் இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. இதனால் படிப்படியாக மண் அடுப்பு மூலம் சமைக்கும் பழக்கமே காலப்போக்கில் மறைந்து போனது.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காஸ் சிலிண்டர் விலை, நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. காஸ் சிலிண்டர் விலை, கூலி சேர்த்தால் தற்போது 900 ரூபாயை தாண்டுகிறது. காஸ் அடுப்பின் விலையும் 2 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.

காஸ் சிலிண்டர், அடுப்பின் தொடர் விலை உயர்வால் கிராம மக்கள், பழைய நிலையில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்யும் வழக்கத்துக்கு திரும்பத் துவங்கியுள்ளனர். இதனால் மண் அடுப்புகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது.  இதுகுறித்து மேலப்பாளையம் குறிச்சி பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘தற்போது சிலிண்டர் விலை ரூ.900 ஆக அதிகரித்துள்ளது. விரைவில் 1000 ரூபாயை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூலி வேலைக்கு சென்று வரும் கிராம மக்கள், பழைய மண் அடுப்புகளை நாடத்துவங்கி உள்ளனர்.

 மேலப்பாளையத்தை சுற்றியுள்ள குலவணிகர்புரம், கொங்கந்தான்பாறை, மேலநத்தம், முன்னீர்பள்ளம், தருவை, திடியூர், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து மண் அடுப்புகளை வாங்கிச் செல்கின்றனர். தற்போது மரப்பொடி அடைத்து பயன்படுத்தும் மண் அடுப்பு ரூ.80க்கும், விறகு அடுப்பு ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே மண் அடுப்பு விற்பனை நடந்து வந்த நிலையில், தற்போது காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் மண் அடுப்புக்கு மீண்டும் மவுசு கூடியுள்ளது’ என்றனர்.

Related Stories: