மத நிகழ்ச்சிகளில் ஈடுபட முன் அனுமதி அவசியம் வெளிநாட்டு இந்தியர்களுக்கு மத்திய அரசு திடீர் கெடுபிடி

புதுடெல்லி: கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா ஊரடங்கின் போது, வழிகாட்டுதல் விதிகளை மீறி, டெல்லியில் நடந்த மத கூட்டத்தில் 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து, விசா விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 233 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஓசிஐ (ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா) கார்டு எனப்படும் இரட்டைக் குடியுரிமை உடைய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் இனிமேல் மேற்கொள்ளும் மத சம்பந்தப்பட்ட கூட்டம், கல்வி ஆராய்ச்சிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் எந்த காரணத்திற்காகவும், பலமுறை இந்தியா வந்து செல்வதற்கான வாழ்நாள் விசா வழங்கப்படும். ஆனால், அவர்கள் மதக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், மலையேறுதல், செய்தி சேகரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக வந்தால், அது குறித்து வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு அதிகாரி அல்லது இந்திய தூதரகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் இனிமேல், இந்தியாவில் எத்தனை நாட்கள் தங்க வேண்டும் என்றாலும், வெளிநாட்டினருக்கான பிராந்திய பதிவு அதிகாரி அல்லது வெளிநாட்டினர் பதிவு அதிகாரியிடம் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>