முதுநிலை ஆசிரியர் நியமன விவகாரத்தில் தேர்வு வாரியம் அலட்சியம் காட்டுவது ஏன்?: தமிழக அரசின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: முதுநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தேர்வு வாரியம் ஏன் அலட்சியம் காட்டுகிறது என கேள்வியும் எழுப்பியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வு முடிவுகள், கடந்தாண்டு நவம்பர் 20, 2020 ஜனவரி 2ம் தேதிகளில் 2 கட்டங்களாக வெளியிடப்பட்டன. இவற்றில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை. அதனால், இப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டன. குறிப்பாக, வேதியியல் பாடத்திற்கு 121 பின்னிணைப்பு பணியிடங்கள், 215 நடப்பு காலியிடங்கள் உட்பட மொத்தம் 356 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

அதற்காக தேர்வு வாரியம் தயாரித்திருந்த தற்காலிக தேர்வுப் பட்டியலில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 34 பேரையும், பட்டியல் இனத்தவர் 5 பேரையும் பொதுப் பிரிவில் சேர்க்காமல், அவரவர் சமூகப் பிரிவுகளில் வாரியம் சேர்த்திருந்தது. இதையடுத்து, முதுநிலை பட்டதாரியான சோபனா உட்பட பல்வேறு ஆசிரியர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழ்நாடு அரசு பள்ளிகளுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது இடஒதுக்கீட்டு முறை சரியான முறையில் பின்பற்றவில்லை. தேர்வின் போது அதற்கு தகுதியான அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப்பிரிவில் நியமனம் செய்ய வேண்டும். அதை விடுத்து முந்தைய ஆண்டுகளில் இருக்கும் பின்னிணைப்பு  காலி இடங்களில் அவர்கள் நிரப்பப்படுகிறார்கள்,’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடஒதுக்கீட்டை பின்பற்றாத ஆசிரியர் தேர்வு வாரியத்தை கடுமையாக கண்டித்தது. மேலும், இடஒதுக்கீட்டை பின்பற்றி பின்னிணைப்பு இடங்களையும், நடப்பு காலியிடங்களையும் நிரப்பும்படி உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.  அதில், ‘ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முன்னதாக இருந்தே தற்போதைய நிலைதான் பின்பற்றப்படுகிறது. அதேபோல், டி.என்.பிஎஸ்.சியிலும் இதேநிலை தான் நடைமுறையில் உள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.    

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு நேற்று ஒருமித்த தீர்ப்பு வழங்கியது. அதில், ‘முதுநிலை ஆசிரியர் நியமன விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால், அதற்கு தடை விதிக்க முடியாது. மேலும், இடஒதுக்கீடு முறையை ஏன் தேர்வு வாரியம் சரியான முறையில் பின்பற்றவில்லை என்பது புரியவில்லை. ஒருவேளை அதனை கவனத்தில் கொள்ளாமல் வாரியம் அலட்சியம் காட்டுகிறதா?,’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

Related Stories: