விலை உயர்வை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்: ஆன்லைனில் ராகுல் புதிய பிரசாரம்

புதுடெல்லி:  நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றது. இதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக ஆன்லைன் பிரசாரத்தையும் நேற்று அவர் தொடங்கி வைத்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘பாஜ என்பது பாரம் ஏற்றும் ஜனதா கட்சி. நாட்டின் நலனை கருதி அவர்களின் கொள்ளைக்கு எதிராக நாம் விரைவில் பேசுவோம். வாருங்கள். விலை உயர்வுக்கு எதிரான பிரசாரத்தில் இணையுங்கள்,’ என கூறப்பட்டுள்ளது. இதேபோல், ராகுல் தனது டிவிட்டர் பதிவில், ‘விலை உயர்வு என்பது சாபமாகும். மத்திய அரசு மக்களை விலையேற்றத்தில் மூழ்கடித்து வரி வருமானத்தை ஈட்டுகிறது. நாட்டின் அழிவுக்கு எதிராக குரல் கொடுங்கள்,’ என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

Related Stories: