தென்மாவட்டங்களில் கோயில் நகரங்களுக்கு பாஜ குறி: தலைநகர தொகுதிகளை தாரை வார்க்கும் அதிமுக

தென்மாவட்டங்களில் கோயில் நகரங்களை குறி வைத்து பாஜ தொகுதிகள் கேட்கும் நிலையில், தலைநகர தொகுதிகள் சிலவற்றையும் தாரை வார்க்க அதிமுக தயாராகிவிட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜவிற்கு 26 முதல் 30 சீட்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் ஓரளவுக்கு உறுதியாகிவிட்டாலும், அக்கட்சியினர் கேட்கும் சீட்கள் அனைத்தும் கோயில் நகரங்களாக உள்ளன. குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லையப்பர் கோயில் உள்ள நெல்லை தொகுதி, அறுபடை வீட்டில் ஒன்றான முருகன் குடி கொண்டுள்ள திருச்செந்தூர், நாகராஜா கோயில் காணப்படும் நாகர்கோவில், காசிவிஸ்வநாதர் கோயில் கொண்டுள்ள தென்காசி உள்ளிட்ட கோயில் நகரங்களை குறி வைத்து பாஜ சீட் கேட்டுள்ளது.

இதுபோக கடந்த நாடாளுமன்ற தொகுதியை போட்டியிட்டதை சுட்டிக்காட்டி, தூத்துக்குடி சட்டசபை தொகுதியையும் பாஜ வேண்டும் என கேட்டுள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகள் மாவட்டத்தின் தலைநகரங்களாகும். இதனால் அதிமுக மெல்லவும் முடியாமல், கக்கவும் முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக நெல்லை ெதாகுதி நயினாருக்கும், தூத்துக்குடி தொகுதி சசிகலா புஷ்பாவிற்கும், நாகர்கோவில் தொகுதி எம்.ஆர்.காந்திக்கும், திருச்செந்தூர் தொகுதி சிவமுருக ஆதித்தனுக்கும் வேண்டும் என வேட்பாளர்களின் பெயர் சொல்லியே பாஜ கேட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 3 தொகுதிகள் அந்தந்த மாவட்டத்தின் தலைநகர தொகுதிகள் என்பதால் அதிமுக அவற்றை விட்டு கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறது. ஆனாலும் அமித்ஷாவின் அழுத்தத்தால் விட்டு கொடுக்கும் நிலையிலே அதிமுக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: