×

இரட்டை கொலை உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூர் பிரபல ரவுடி வெட்டி கொலை: தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்குப்பழி : ஒருவாரம் நோட்டமிட்டு 6 பேர் வெறிச்செயல்

சென்னை: சென்னையில் ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருந்தவர் மயிலாப்பூர் சிவக்குமார் (43). பிரபல ரவுடியான இவர், 2001ம் ஆண்டு அயோத்திகுப்பம் பிரபல தாதா வீரமணியுடன் சேர்ந்து ஜாம்பஜார் ரவுடியும், அதிமுக பிரமுகருமான தோட்டம் சேகர் என்பவரை வெட்டி கொலை செய்து தனது முதல் கொலையை பதிவு ெசய்தார். பின்னர் 2011ம் ஆண்டு மயிலாப்பூரில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி ரவுடி பில்லா சுரேஷ் (30) மற்றும் அவரது நண்பரான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி விஜயகுமார் (36) ஆகியோரை வெட்டி இரட்டை கொலை செய்தார். அதன்பிறகு தென்சென்னையில் அசைக்க முடியாக ரவுடியாக சிவக்குமார் உருவெடுத்தார். இவர், நேரடியாக 4 கொலையில் ஈடுபட்டிருந்தாலும், 7 கொலை வழக்குகள் அவர் மீது உள்ளன. இதுதவிர கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு என மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், ராயப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்றுவரை நிலுவையில் உள்ளன.

சென்னையில் நிழல் உலக பிரபல தாதாவாக வலம் வரும் சம்பா செந்திலுடன் நெருங்கிய தொடர்புடையவர் சிவக்குமார். கடந்த ஆண்டு பிரபல ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்காதோப்பு பாலாஜி ஆகியோரை அமெரிக்க துணை தூதரகம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி செய்த சம்பவத்தில் தொடர்புடையவர். சென்னை ரவுடிகளில் இவர் ஏ பிளஸ் கேட்டகிரியில் இருந்தார். இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவரது திருமணத்திற்கு முன்னாள் டிஜிபி மற்றும் மயிலாப்பூரில் உள்ள உதவி ஆய்வாளர் உட்பட பலர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். உதவி ஆய்வாளர் மட்டும் சிவக்குமாருக்கு தனியாக 6 சவரன் தங்க செயினை அன்பளிப்பாக அளித்தார். சிவக்குமாரை கொலை செய்ய அவரது எதிரிகள் பலமுறை முயற்சி செய்தனர். ஆனால், அவர் சாதுரியமாக அவர்களிடம் இருந்து தப்பி வந்தார். இதனால் எப்போதும் 5 அல்லது 8 பேர் உடனிருப்பார்கள்.

அப்படி இருந்தாலும் அவர் தனக்கு என ‘ஒரு கை துப்பாக்கி, சயனைடு கத்தி’ வைத்திருப்பார். மயிலாப்பூர் பகுதியில் சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வந்த அவர், கட்டப்பஞ்சாயத்து என்றாலும் சரி, கொலை செய்ய வேண்டும் என்றாலும் சரி முன் பணமாக 10 லட்சம் கொடுக்க வேண்டும். பணத்தை பெற்ற பிறகுதான், அவர் எந்த காரியத்திலும் இறங்குவார். இதற்காக கொலை செய்ய ஆட்கள் அனுப்பும் கேங் லீடராகவும் செயல்பட்டு வந்தார். தோட்டம் சேகர் கொலைக்கு பழிவாங்க அவரது ஆதரவாளர்கள் மற்றும் அவரது மகன் அழகுராஜா பலமுறை சிவக்குமாரை கொலை செய்ய முயற்சி செய்தனர். இதனால் தன்னை கொலை செய்வதற்கு முன்பு தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி மலர் மற்றும் அவரது மகன் ரவுடியான அழகுராஜாவை கொலை செய்யும் நோக்கில், கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீன அதிபர் சென்னைக்கு வரும் முதல் நாள் எழும்பூரில் இருந்து ஆட்டோவில் சென்ற தோட்டம் சேகர் மனைவி மலர் மற்றும் மகன் அழகுராஜாவை கொலை செய்ய சிவக்குமார் ஆட்களை அனுப்பி வைத்தார். ஆட்டோ ரிச்சி தெருவில் உள்ள காசினோ திரையரங்கம் அருகே வரும் போது, சிவக்குமார் ஆட்கள் வழிமறித்து மலர் மற்றும் அழகு ராஜாவை வெட்டினர்.

அப்போது அழகுராஜா நாட்டு வெடி குண்டுகளை வீசி அவர்களிடம் இருந்து தப்பினார். இதற்கு சிவக்குமாரை பழிவாங்கும் நோக்கில் ரவுடி அழகு ராஜா தனது நண்பரான மதுரபாலாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் மயிலாப்பூர் அருகே பெண் ஒருவரை வீட்டுடன் தீவைத்து எரித்து கொலை செய்ய முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மயிலாப்பூர் ரவுடி சிவக்குமாரை தனிப்படை போலீசார் உத்திரமேரூர் அருகே அவரது சகோதரி வீட்டில் துப்பாக்கி முனையில் கைது ெசய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் பட்டாக்கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மயிலாப்பூர் சிவக்குமார், சிறையில் இருந்தபடியே பல கொலைகளை தனது ஆதரவாளர்கள் மூலம் அரங்கேற்றி வந்தார். இந்நிலையில், சிவக்குமார் கொலை முயற்சி வழக்கில் சிறைக்கு செல்வதற்கு முன்பு அசோக் நகர் போஸ்டல் காலனி 2வது தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் என்பவரிடம் ₹10 லட்சம் பணம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிவக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். செலவுக்கு பணம் வேண்டி ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டினிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை வாங்க கடந்த 4 நாட்களாக அசோக் நகர் பகுதிக்கு சிவக்குமார் தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் சென்று வந்துள்ளார். இதனால், தனது ஆதரவாளர்களுடன் கடந்த 3 நாட்களாக ரவுடி சிவக்குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் ரியல் எஸ்ேட் அதிபர் ஜஸ்டின் அலுவலகத்திற்கு செல்லும் தகவல் அழகு ராஜாவுக்கு கிடைத்தது. அதன்படி 3 பைக்கில் 6 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். ரியல் எஸ்டேட் அதிபர் அலுவலகத்திற்குள் செல்லும் போது மின்னல் வேகத்தில் 6 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரை வழிமறித்து ஓட ஓடி விரட்டி வெட்டினர். போதையில் இருந்த சிவக்குமார் இதை சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அவர்களிடம் இருந்து தப்பிக்க ரியல் எஸ்டேட் அதிபர் அலுவலகத்திற்குள் புகுந்து கதவை மூட முயன்யன்றுள்ளார். ஆனால் கும்பல் சிவக்குமாரை தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

சிவக்குமாருடன் வந்த அறிவழகன் உட்பட 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். தகவல் அறிந்த அசோக் நகர் போலீசார்  வந்து  சிவக்குமாரின் ஆதரவாளர்கள் 2 பேரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரவுடி சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்ைட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை நடந்த பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று அழகுராஜா, மதுரபாலா உட்பட 6 பேரை தேடினர். இந்நிலையில், ரவுடி சிவக்குமாரை கொலை செய்த ரவுடி அழகுராஜா அவரது தம்பி பாலாஜி, நண்பர்களான ரோகித்ராஜா, பாண்டி (எ) பாண்டியன் ஆகிய 5 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நேற்று மதியம் சரணடைந்தனர்.  ரவுடி மதுரபாலா மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

தந்தையை கொன்ற 11வது நபரும் பலி
ஜாம்பஜாரில் பிரபல ரவுடியாக இருந்த தோட்டம் சேகரை அயோத்திகுப்பம் வீரமணி, ரவுடி சிவக்குமார் உட்பட 11 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். இதில் வீரமணியை போலீசார் என்கவுன்டர் செய்தனர். மீதம் உள்ள 10 பேரில் 9 பேரை தோட்டம் சேகர் ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்துவிட்டனர். ரவுடி சிவக்குமார் மட்டும்தான் உயிருடன் இருந்தார். அவரையும் தோட்டம் சேகர் மகன்கள் அழகுராஜா மற்றும் பாலாஜி ஆகியோர் நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை மூலம் தனது தந்தையை வெட்டிய 11 பேரையும் கொலை செய்து பழியை தீர்த்துக்கொண்டனர்.

Tags : Mylapore , Mylapore celebrity rowdy hacked to death in more than 40 cases, including double murder
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...