8,200 பேருக்கு ஒரேநாளில் நேர்காணல் முடிந்த நிலையில் அதிமுகவில் 6 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த 8,200 பேருக்கு ஒரே நாளில் நேர்காணல் முடிந்த நிலையில், இ.பி.எஸ்., ஓபிஎஸ், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.சண்முகநாதன், தேன்மொழி ஆகிய 6 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அதிமுக சார்பில் போட்டியிடுகிறவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. 8,200 பேர் விருப்பமனு தாக்கல் செய்தனர். விருப்ப மனு தாக்கல் செய்த 8,200 பேரும் நேற்று முன்தினம் (4ம் தேதி) ஒரே நாளில் சென்னைக்கு வரழைக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தாமல் 5, 6 மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 500, 600 பேரை ஒரே அறைக்குள் வைத்து பொதுக்கூட்டம் போன்று நேர்காணல் நடத்தப்பட்டது. உண்மையில், விருப்ப மனு தாக்கல் செய்த அனைவரும் வந்துள்ளனரா என்றுகூட விசாரணை நடத்தாமல், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆட்சி மன்ற குழுவில் இடம் பிடித்தவர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தவர்களிடம், \”கட்சி சார்பில் யாரை நிறுத்தினாலும் அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டும்\” என்று அட்வைஸ் மட்டுமே கூறி அனுப்பி வைத்தனர்.

அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே வேட்பாளர்கள் பட்டியல் தயாராக வைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த நேர்காணல் ஒரு கண்துடைப்பு நாடகம் என்றே அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். அதாவது, ஏற்கனவே தமிழகத்தில் எந்தெந்த தொகுதிக்கு எந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று ஒரு உத்தேச பட்டியல் அதிமுக தலைமை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தது. அதில், ஒரு தொகுதிக்கு 3, 4 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் விவரங்களை உளவுத்துறையிடம் கொடுத்து அவர்களின் பயோடேட்டா, ஜாதகம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தயார் செய்து தரும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. பின்னர் உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் 2 பேர் பெயர் தேர்வு செய்யப்பட்டது.  இதையடுத்து அதிமுகவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனமான ‘எஸ்எம்எஸ்’ டீமிடம் வழங்கி, இதில் யாருக்கு சீட் வழங்கலாம் என்று கருத்து கேட்கப்பட்டு, அதன்படி இறுதி பட்டியல் தயாரானது. மற்றபடி நேற்று முன்தினம் நடந்தது எல்லாம் ஒரு சம்பிரதாய நேர்காணல் ஆகும்.

அதிமுக இறுதி செய்யும் பட்டியலில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் 40 பேருக்கு சீட் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இறுதியில் 25 சீட் வரை ஓபிஎஸ் தரப்பினர் இறங்கி வந்துள்ளனர். ஆனால், துணை முதல்வர் ஆதரவாளர்கள் 15 பேருக்கு மட்டுமே சீட் வழங்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் உள்ளார். மற்ற தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அதிமுகவில் மேலும் கோஷ்டி மோதல், போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜவுக்கு சீட் ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டன. 26 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு 15 சீட் ஒதுக்க அதிமுக முன் வந்தது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.  

இதற்கிடையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்களை தேமுதிக வாங்கியது. அதோடு பிரேமலதா, விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், சுதீஷ் ஆகியோரும் சீட் கேட்டு தங்களது கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர். இதனால் தேமுதிக கட்சி அதிமுக கொடுக்க உள்ள 15 சீட்டை வாங்க முன்வருமா, தனியாக நின்று போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று சிறிய கட்சிகளான தமாகா 2, ஜான்பாண்டியனுக்கு 1, புதிய நீதிக்கட்சிக்கு 1 சீட் வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களும் கொடுப்பதை வாங்கினால் மட்டுமே சீட். இல்லாவிட்டால் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு முழுமையாக சீட் மற்றும் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், நேற்று நல்லநாள் என்பதால் அதிமுக சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று மதியம் வெளியிடப்பட்டது. அதில் 6 பேர் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.

* தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதி - ஓ.பன்னீர்செல்வம் (ஒருங்கிணைப்பாளர்)

* சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி தொகுதி - எடப்பாடி பழனிசாமி (இணை ஒருங்கிணைப்பாளர்)

* வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் ராயபுரம் தொகுதி - டி.ஜெயக்குமார் (வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர்)

* விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதி - சி.வி.சண்முகம் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்)

* தூத்துக்குடி தெற்கு மாவட்டம் வைகுண்டம் தொகுதி - எஸ்.பி.சண்முகநாதன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்)

* திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை (தனி) தொகுதி - எஸ்.தேன்மொழி (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இணை செயலாளர்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சாதி அடிப்படையில் முதல் பட்டியல்

அதிமுக சார்பில் நேற்று முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதுவும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்த 6 பேரும் தனித்தனி சமூகத்தை சேர்ந்தவர்கள். அதன்படி எடப்பாடி பழனிசாமி, கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1989ம் ஆண்டு முதல் 4 முறை எம்எல்ஏ ஆக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது முதல்வராக உள்ளார். மீண்டும் 5வது முறையாக போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம், மறவர் சமூகத்தை சேர்ந்தவர். 2001ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியிலும், 2011ம் ஆண்டு முதல் போடிநாயக்கனூர் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு, தற்போது துணை முதல்வராக உள்ளார்.

மீண்டும் 5வது முறையாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டி.ஜெயக்குமார், மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர். தொடர்ந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு தற்போது மீன்வள துறை அமைச்சராக உள்ளார். சி.வி.சண்முகம், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். விழுப்புரம் தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராக உள்ளார். எஸ்.பி.சண்முகநாதன், நாடார் சமூகத்தை சேர்ந்தவர். 2001ம் ஆண்டு முதல் 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 4 முறையாக வைகுண்டம் தொகுதியில் போட்டியிடுகிறார். எஸ்.தேன்மொழி, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். நிலக்கோட்டை தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். தற்போது 3வது முறையாக போட்டியிடுகிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ரெடி

அதிமுக சார்பில் நேற்று முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக பாஜ, பாமக ஆகியோருக்கு வழங்கப்பட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும், தேமுதிக உள்ளிட்ட மற்ற சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்தும் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து கேட்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுக்கிர ஓரையில் வெளியீடு

ஜோதிடம், நல்ல நேரம், சகுனம் பார்க்காமல் அதிமுகவில் அணு கூட அசையாது. ஜெயலலிதா காலத்தில் இருந்து இப்போது வரை இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மலையாள ஜோதிடர்கள் தொடங்கி ரகம்ரகமான ஜோதிடர்களின் வாக்குகளை கேட்டு நடப்பது ஜெயலலிதாவின் வழக்கம். எடப்பாடியும் ஓபிஎஸ்சும் இந்த ஜோதிட ஜோதிக்கு குறை வைக்கவில்லை. நல்ல நேரம், சகுனத்தையும் பார்க்காமல் இருப்பதில்லை. பாஜவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன் தன் வீட்டில் விசேஷ பூஜையே நடத்தினார் எடப்பாடி. இப்போது வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதிலும் இதை காட்டியிருக்கிறார். வெள்ளிக்கிழமை (நேற்று) மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை சுக்கிர ஓரை எனப்படும் நல்ல நேரமாகும். மேலும் ஜெயலலிதாவுக்கு பிடித்த எண் ஆறு. இந்த அடிப்படையில் ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சுக்கிர ஓரையில் வெளியிட்டிருக்கிறதாம் அதிமுக.

கட்சி அங்கீகார கடிதமான பி பார்ம் வழங்கப்பட்டது

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியல் வெளியிடுவதற்கு முன் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது, முதல்வர் எடப்பாடி, கட்சி அங்கீகார கடிதமான பி பார்ம் எடுத்து வரும்படி தனது உதவியாளர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்த படிவத்தில் முதல்வரும், துணை முதல்வரும் கையெழுத்திட்டு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேற்றே விநியோகிகப்பட்டது. நேற்று நல்ல நாள் என்பதால், அதிகப்படியான பி பார்ம் விண்ணப்பத்தில் இருவரும் கையெழுத்திட்டு தயாராக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: