பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 25 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு: கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல்

சென்னை:  சென்னையை தலைமையிடமாக கொண்டு பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நகைக்கடைக்கு சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சிப்காட் பகுதியில் அதிநவீன கருவிகளுடன் நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. சென்னையில் 4 கிளைகள் உட்பட தமிழகம் முழுவதும் 15 கிளைகள் செயல்படுகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்தது மற்றும் தங்க நகைகள் செய்யும் அதிநவீன கருவிகள் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், நகைக்கடையில் விற்பனை செய்யப்படும் நகைகளுக்கு இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் மதியம் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 15 நகைக்கடைகள் மற்றும் உரிமையாளர் வீடு, தலைமை அலுவலகம் என 25 இடங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல்நாள் சோதனையில், 15 கடையில் உள்ள மொத்த தங்கம் இருப்பு எவ்வளவு, வைரங்கள் எவ்வளவு என்று கணக்காய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 2019-20 மற்றும் 2010-21ம் ஆண்டுக்கு பிரபல நகைக்கடை மூலம் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ஆவணங்களை வைத்து நகைக்கடையில் விற்பனை செய்யப்பட்ட கணக்குகளுடன் ஒப்பிட்டு கணக்காய்வு செய்யப்பட்டது. அதில் பல கோடி ரூபாய் வருமானத்தை மத்திய அரசுக்கு மறைத்து கணக்கு காட்டியதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரண்டாவது நாளாக நீடித்து வரும் சோதனையில் தங்க நகைகள் தயாரிக்கும் மறைமலைநகர் சிப்காட்டில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பல கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள், வைரங்கள் பறிமுதல் செய்து மதிப்பீடும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற ஊழியர்கள் யாரையும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியே அனுப்பாமல் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதற்கான ஆவணங்கள், பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துப்பட்டியல் கைப்பற்றி உரிமையாளர் மற்றும் நகைக்கடை மேலாளர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு வரை நீடித்த இந்த சோதனை இன்றும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. சோதனை முடிவில்தான் மொத்த சொத்துகள் எவ்வளவு, மத்திய அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: