கடந்த 10 ஆண்டு காலத்தில் மின்சார வாரியத்தில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை: நத்தம் விஸ்வநாதன் மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: கடந்த 10 ஆண்டு காலத்தில் மின்சார வாரியத்தில் மட்டும் 2 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர்கள் மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2011ல் இருந்து 2021 வரை அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது.  இந்த 10 ஆண்டு காலத்தில் அனைத்து துறையிலும் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்லி வந்திருக்கிறார்.

மேடைகள்தோறும் அவர் அளித்த விளக்கங்கள் ஊடகங்களில் வந்திருக்கிறது.  ஆனால், இன்றைய தினத்தில் திடுக்கிடக்கூடிய ஒரு தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதாவது,  பாஜவின் ஆளுமையில் இருக்கக்கூடிய அல்லது அதிகாரத்திற்கு  உட்பட்ட வருமான வரித்துறை இலாகாவின் மூலம் ஒரு பிரமிக்கத்தக்க, அதிர்ச்சி தரத்தக்க ஒரு விவரம் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதாவது, மின்கட்டணம் 2011ம் ஆண்டுக்கு பிறகு படுபயங்கரமாக ஏறி, மின்சார வாரியம் நட்டத்திலே ஓடுகிறது என்பதை எல்லா தரப்பு மக்களும் அறிவார்கள்.  ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கக்கூடிய அளவுக்கு மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த மின்கட்டணத்திற்கு அல்லது மின்சார வாரியம் நட்டத்திலே இயங்குவதற்கு என்ன காரணம் என்று பலரும் ஆராய்ந்து பார்த்த நேரத்திலே இன்றைக்கு எங்களுக்கு பயங்கரமான தகவல் கிடைத்து இருக்கிறது. 2011ல் இருந்து 2016ம் ஆண்டு வரை மின்சாரத் துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் 2016ம் ஆண்டு தேர்தலில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ததில் தனக்கு சொத்து  ஏறத்தாழ 3 கோடிக்குத்தான் இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். அசையும் பொருள், அசையாத பொருள் என 3 கோடிக்குதான் தனக்கு சொத்து இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால், இன்றைக்கு 2019ம் ஆண்டு கணக்குப்படி வருமானவரித் துறைக்கு அவர் செலுத்த வேண்டிய பாக்கி தொகை மட்டும்  279 கோடியே 3 லட்சத்து  79 ஆயிரத்து 480 ரூபாய். அதாவது அவர் செலுத்த வேண்டிய பாக்கி மட்டும். வருமான வரித்துறை இலாகாவிலிருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அது எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அப்படியென்றால் அவரின் வருமானம் எவ்வளவு இருக்கும். ஏறத்தாழ ஆயிரம் கோடி இருந்திருக்க வேண்டும்.  30 சதவீதம் வருமானவரி போட்டால் கூட 800 கோடி வரும். இதை மின்சார வாரியத்துறை அமைச்சராக இருந்தவர் எப்படி சம்பாதித்தார். பல்வேறு முறைகேடுகள், நிலக்கரி ஊழல், நிலக்கரி வாங்குவதில், ஏற்றுமதியில் எல்லாம் மின்சார வாரியத்திலே அவரின் ஒப்பந்தங்கள் மூலமாக சம்பாதித்த பணம்தான் இது என்று யாரும் சொல்லி விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அவர்தான் இந்த இலாகாவின் அமைச்சராக இருந்தார். அவருக்கு வேறு வருமானம் இல்லை.

அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் எந்த தொழிலும் பண்ணியதாக தெரியவில்லை. இந்த 5 ஆண்டு காலம் அவரது காலத்திற்கு பிறகு அமைச்சராக வந்த தங்கமணியும் அவர் என்னென்ன விதிமுறைகளை பின்பற்றினாரோ அது அப்படியே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. அதைதான் மு.க.ஸ்டாலின் ஆளுநர் இடத்தில் அளித்த புகாரில் மின்சார வாரியத்தில் ஊழல் நடந்ததாக சொல்லி இருக்கிறார். இந்த 10 ஆண்டு காலத்தில் மின்சார வாரியத்திலே மட்டும் ஏறத்தாழ 2 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் பணம் என்பதற்கு இதை காட்டிலும் வேறு ஆதாரம் தேவையில்லை. ஒரு அமைச்சர் இலாகாவிலே மட்டும் 1000 கோடி என்று சொன்னால் தமிழ்நாட்டிலே இதைவிட பெரிய இலாகா எல்லாம் இருக்கிறது.  

நெடுஞ்சாலைத் துறை, உணவுத்துறை, இவையெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்ற இலாகாக்கள். கணக்கு போட்டு பார்த்தால் ஆயிரக்கணக்கான கோடி இந்த ஆட்சியிலே ஊழல் நடந்து இருக்கிறது. பொதுமக்களுக்கு இதையெல்லாம் தெரியப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதைதான் மு.க.ஸ்டாலின் செய்துகொண்டு இருக்கிறார். மின்சார வாரியத்திலே மட்டும் 2 ஆயிரம் கோடி ஊழல் என்றால், அந்த ஊழலை தவிர்த்து இருந்தால் இந்த நஷ்டம் வந்திருக்காது. மின்கட்டணம் ஏற்றி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏழை, எளிய நடுத்தர மக்கள் மீது  கட்டண உயர்வு சுமத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை விளக்குவதற்காகதான் இதை கூறுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது என்.ஆர்.இளங்கோ எம்பி உடனிருந்தார்.

Related Stories:

>