பீஜிங்: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 6.8 சதவீதம் அதிகமாகும். உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 2வது இடத்தில் சீனா இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கு சீனா கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு வரை இரட்டை இலக்கத்தில் ராணுவத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக ஒற்றை இலக்கத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டில் ராணுவத்துக்கு 196.44 பில்லியன் டாலரை சீன அரசு ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், 2021ம் நிதியாண்டில் 209 பில்லியன் டாலர் நிதி (ரூ.15,22,878 கோடி) ராணுவத்துக்கு ஒதுக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் சீன அரசு அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 6.8 சதவீதம் கூடுதலாகும்.