அரசு விழாவுக்கு சகோதரரை அனுப்பிய பீகார் அமைச்சர்: முதல்வர் நிதிஷ் கொதிப்பு

பாட்னா: பீகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஹாஜிப்பூரில் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின மீனவர்களுக்கு வாகனம் வழங்கும் விழா கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் முகேஷ் சைனி கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. கடைசி நேரத்தில் விழாவில் கலந்த கொள்ளாத முகேஷ், தனது சகோதரரை அரசு வாகனத்தில் அனுப்பி வைத்தார். அமைச்சரின் சார்பில் அவரது சகோதரர் சந்தோஷ் சைனி கலந்து கொண்டு, பயனாளர்களுக்கு வாகனங்களின் சாவியை அரசு மேடையில் வழங்கினார். இது மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது.

ஊடகங்களில் இந்த செய்தி வெளியானதுடன், வீடியோக்களும் பரவின. இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது. சட்டசபை கூட்டத் தொடரில் அமைச்சர் கலந்து கொண்டு வருவதால் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை என்று இதற்கு அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ‘அரசு விழாவில் கலந்து கொள்ள முடியாதது தவறல்ல. தனக்கான பிரதிநிதியாக ஓர் அரசு அதிகாரியையோ, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியையோ அமைச்சர் அனுப்பியிருக்க வேண்டும்’ என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.  இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் பதிலளித்த முதல்வர் நிதிஷ் குமார், ‘‘பத்திரிகைகளில் இந்த செய்தியை பார்த்து கடும் அதிருப்தி அடைந்தேன். அமைச்சரிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

>