பிஞ்ச் அதிரடியில் நியூசி. மீண்டும் தோல்வி

வெலிங்டன்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டி20 போட்டியில், நியூசிலாந்து 50 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்தது. வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ வேடு, கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். வேடு 14, ஜோஷ் பிலிப் 13, மேக்ஸ்வெல் 18, ஸ்டாய்னிஸ் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 47 பந்தில் அரை சதம் அடித்தார்.

ஆஷ்டன் ஏகார் டக் அவுட்டாகி வெளியேற, மிட்செல் மார்ஷ் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அது வரை பொறுமையை கடைப்பிடித்த பிஞ்ச், ஜேமிசன் வீசிய கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். அந்த ஓவரில் மட்டும் அவர் 4 சிக்சர் உட்பட 26 ரன் எடுக்க, ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. பிஞ்ச் 79 ரன் (55பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்), ஜை ரிச்சர்ட்சன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. தரப்பில் ஈஷ் சோதி 3, போல்ட் 2, சான்ட்னர் 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 18.5 ஓவரில் 106 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. நியூசி. தரப்பில் அதிகபட்சமாக கைல் ஜேமிசன் 30 ரன் (18 பந்து, 5 பவுண்டரி), டிம் செய்பெர்ட் 19, டிவோன் கான்வே 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். ஆஸி. பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 3, ஏகார், ஸம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆரோன் பிஞ்ச் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 5 போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் சமநிலை வகிக்க, கடைசி டி20 போட்டி வெலிங்டனில்  நாளை நடக்கிறது. அதில் வெற்றி பெறும் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை

கைப்பற்றும்.

Related Stories:

>