பன்ட்-வாஷிங்டன் ஜோடி அபார ஆட்டம்: முன்னிலை பெற்றது இந்தியா; இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி

அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்டில், ரிஷப் பன்ட் - வாஷிங்டன் சுந்தர் ஜோடியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு சுருண்டது. பேர்ஸ்டோ 28, ஸ்டோக்ஸ் 55, போப் 29, லாரன்ஸ் 46 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் அக்சர் 4, அஷ்வின் 3, சிராஜ் 2, சுந்தர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்திருந்தது.தொடக்க வீரர் கில் டக் அவுட்டானார்.

ரோகித் 8 ரன், புஜாரா 15 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுமையாக விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. புஜாரா 17 ரன் எடுத்து லீச் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமல் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் போக்ஸ் வசம் பிடிபட்டார். இந்தியா 26.4 ஓவரில் 41 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், ரோகித்துடன் இணைந்த துணை கேப்டன் ரகானே 45 பந்தில் 4 பவுண்டரியுடன் 27 ரன் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோகித் - பன்ட் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. வழக்கத்துக்கு மாறாக மிக நிதானமாக விளையாடி அரை சதத்தை நெருங்கிய ரோகித் 49 ரன் எடுத்த நிலையில் (144 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அஷ்வின் 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 58.1 ஓவரில் 146 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இதனால் உற்சாகமான இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள், இந்தியாவை விரைவாக சுருட்டி கணிசமான முன்னிலை பெறும் முனைப்புடன் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

எனினும், பன்ட் - வாஷிங்டன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு மிக உறுதியுடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் விழிபிதுங்கினர். வாஷிங்டன் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, 82 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்த பன்ட் அதன் பிறகு அதிரடியில் இறங்கினார். அடுத்த 50 ரன் எடுக்க அவருக்கு 33 பந்துகளே தேவைப்பட்டது. பெஸ் வீசிய பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி சதம் அடித்து அசத்தினார் பன்ட். அவர் 101 ரன் (118 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆண்டர்சன் வேகத்தில் ரூட் வசம் பிடிபட்டார். பன்ட் - வாஷிங்டன் இணைந்து 113 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன் குவித்துள்ளது. வாஷிங்டன் 60 ரன், அக்சர் 11 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 3, ஸ்டோக்ஸ், லீச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 3 விக்கெட் இருக்க, இந்தியா 89 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியுடன் இன்று 3ம் நாள் சவாலை எதிர்கொள்கிறது.

Related Stories:

>