8.1 ரிக்டேர் அளவில் நியூசிலாந்தில் அடுத்தடுத்து பூகம்பம்: சுனாமி எழுந்ததால் மக்கள் அலறி ஓட்டம்

வெலிங்டன்: நியூசிலாந்தில் 3 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், பசிபிக் தீவில் 8.1 ரிக்டேர் அளவில் மிக வலுவான பூகம்பம் நேற்று காலை ஏற்பட்டது. இதனால், நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சில இடங்களில் கடலில் ராட்சத அலைகள் எழுந்ததால் மக்கள் பீதிக்குள்ளாகினர். பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையத்திற்குள் அமைந்துள்ள நாடு நியூசிலாந்து. இங்கு கடலுக்குக் கீழே உள்ள பல டெக்டோனிக் பிளேட்களின் குறுக்குவெட்டுப் பகுதிகளில்தான் எரிமலை மற்றும் நிலநடுக்கத்தின் மையம் உள்ளது. இதன் காரணமாக, நியூசிலாந்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நியூசிலாந்தில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஜிஸ்போர்ன் டோகோமரு ஜலசந்தி பகுதிகளை மையமாக கொண்டு ரிக்டேர் அளவில் 7.4 மற்றும் 7.3  புள்ளிகளாக பதிவாகின.

இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் நியூசிலாந்தில் இருந்து 1000 கிமீ தொலைவில் அமைந்துள்ள பசிபிக் தீவான கெர்மடெக் தீவில் நேற்று காலை 8.1 ரிக்டேர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் முக்கிய நகரங்களான ஆக்லாந்து வெலிங்டன், கிறிஸ்ட்சர்ச் நகரங்களில் உணரப்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதிக்குள்ளாகினர்.

பயங்கர பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பூகம்பத்தை உணராவிட்டாலும் காத்திருக்க வேண்டாம். ஆபத்தான சுனாமி  வரலாம் என தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம்  எச்சரித்தது. இதனால், மக்கள் உயரமான இடங்களை நோக்கி ஓடினர். வீடுகளை விட்டு பலர் தெருக்கள், சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதனால், பல நகரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள், குளறுபடிகள் ஏற்பட்டன.சில கடற்கரைகளில் 3 மீட்டர் வரை சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். யாரும் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ள நியூசிலாந்து அரசு, கடற்கரை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தி உள்ளது. ஆனாலும், சில மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.

* கடந்த 1976ம் ஆண்டு ஆஸ்திரேலிய டெக்டோனிக் பிளேட் மற்றும் பசிபிக் பெருங்கடலின் குறுக்குவெட்டில்  8.0 ரிக்டேர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பின் இப்பிராந்தியத்தில் வரலாற்றில் மிக வலுவான பூகம்பம் பதிவாகி உள்ளது.

* கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 6.3 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 185 பேர் பலியாகினர்.

* தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதிகள் என்பதால் பெரிய அளவில் உயிர் சேதம், பாதிப்புகள் ஏற்படவில்லை.

Related Stories: