புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம்: என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சந்திப்பு: பாஜக கலக்கம்.!!!

புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையில் மதச்சார்பற்ற அணிகள் ஓரணியாக  சட்டமன்ற தேர்தலை களம் காண தயாராகி வருகின்றன. அதேவேளையில் தேஜ கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, அதிமுக அணிகள் ஓரணியாக நிற்க முடிவு செய்துள்ளன. இந்த அணியில் இடம்பெற்றிருந்த ரங்கசாமி முதல்வர் வேட்பாளர்  பிரச்னை காரணமாக தற்போது விலகும் முடிவை கையில் எடுத்துள்ள நிலையில், அவரது நடவடிக்கையை அனைத்து கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான ரங்கசாமியை மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசிவருகின்றனர். ரங்கசாமி-பாஜக  இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் உள்ள நிலையில், ரங்கசாமியை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.  சந்திப்பின்போது, தங்களுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் முதல்வர் வேட்பாளராக நீங்கள் தான் இருப்பீர்கள் என்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ரங்கசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் அணிக்கு ரங்கசாமி தலைமை தாங்க வேண்டுமென திமுக முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான நாஜிம் அழைப்பு விடுத்து ஒரு காணொலி  பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆனால், என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தேர்தலுக்கு பின் ஆட்சியமைக்கும்போது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம்  என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அக்கட்சி நிர்வாகிகள் ரங்கசாமிக்கு முழு அதிகாரம் வழங்கியுள்ளனர். ரங்கசாமியை தேஜ கூட்டணிக்கு இழுக்க பாஜக, அதிமுக தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்  ரங்கசாமி இதுவரை பிடிகொடுக்காமல் நழுவி வருகிறார். தொடர்ந்து, பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் இழுபறி நீடித்து வரும் ரங்கசாமியை திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் நாடுவது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.

Related Stories: