×

களப்பணியால் அவலம் மிகுந்த அ.தி.மு.க. ஆட்சி முடியட்டும்; உதயசூரியனின் வெற்றிக் கதிர்களின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்.!!!

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய மடலில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை எதிர்பார்ப்பு, ஆட்சி மாற்றம். அதுவும், பத்தாண்டுகால அ.தி.மு.க.வின் ஆட்சியால் இருண்டு பாழாகிக் கிடக்கும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வேறுபாடின்றி வெளிச்சம் பாய்ச்சும் வல்லமை மிக்க தி.மு.கழகம் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆவலான எதிர்பார்ப்பாக உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றிடும் பெரும் பொறுப்பு, தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகிவிட்ட, தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் இருக்கிறது.

தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு செயல் வடிவமும் வண்ணமும் தரும் இலட்சியப் பிரகடனத்தை தீரர் கோட்டமாம் திருச்சியிலே நடைபெறவுள்ள சிறப்புப் பொதுக்கூட்டத்தில் வெளியிட இருப்பதை, என்னுடைய பிறந்தநாளான மார்ச் 1-ஆம் நாள் அறிவித்திருந்ததை உடன்பிறப்புகளான நீங்கள் அறிவீர்கள். கழகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களும் ஊடகங்கள் வாயிலாக அதனை அறிந்துகொண்டு, எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் காத்திருக்கின்றனர்.

தொலைநோக்குப் பார்வை கொண்ட - தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள் அடங்கிய அந்த இலட்சியப் பிரகடனத்தை வெளியிடுவதற்காக மார்ச் 7-ஆம் நாள் தீரர் கோட்டமாம் திருச்சியிலே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சிறுகனூரில் நடைபெறும் சிறப்புப் பொதுக்கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைத்து, கடிதம் ஒன்றையும் எழுதினேன். கழகத்தைப் பொறுத்தவரை திண்ணைப் பிரச்சாரம்கூட திருமண வீடு போல திரளான பங்கேற்புடன் இருக்கும். தெருமுனைக்கூட்டங்கள் பொதுக்கூட்டங்கள் போலவும், பொதுக்கூட்டங்கள் மாநாடு போலவும், மாநாடுகள் மக்கள் மாக்கடல் நுழைந்தது போலவும் நடைபெறுவது வழக்கம். திருச்சியிலே நடைபெறவிருக்கும் சிறப்புப் பொதுக்கூட்டத்திற்கான பணிகளை கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் இரவு பகல் பாராது, கழக உடன்பிறப்புகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகிறார்.

அந்தப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள், நிகழ்ச்சி நிரல்கள், அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவை குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (மார்ச் 5) மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தை காணொலி  வாயிலாக  நடத்தினோம். கழகத் தலைவர் என்ற பொறுப்பை சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஆலோசித்து எடுத்துள்ள முடிவினை, உடன்பிறப்புகளான உங்களுடன் இந்த மடல் வாயிலாகப் பகிர்ந்துகொண்டு, சிறப்புப் பொதுக்கூட்டத்தை வெற்றி மாநாட்டிற்கான முன்னோட்டமாக்கிட உறுதியேற்க அழைக்கிறேன்.

இருண்ட தமிழகத்திற்கு நிரந்தர ஒளி வழங்கிட, உதயசூரியனால்தான் முடியும் எனும் தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ எனும் தலைப்பில் மார்ச் 7 அன்று திருச்சியிலே சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பொதுக்கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகளுடன் நகரம், ஒன்றியம், பேரூர் ஆகிய கழக அமைப்புகளைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளும், அவர்களுடன் வட்டக் கழக நிர்வாகிகளும் பங்கேற்கிற வகையில் பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் மட்டும்தான் என்று நினைத்திட வேண்டாம். கழகத்தைப் பொறுத்தவரை, அடிப்படை உறுப்பினராக இருக்கின்ற ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் அத்தனை பேருமே இந்த இயக்கத்தின் ரத்தநாளங்கள்தான். அவர்களின் பங்கேற்பில்தான் கழகத்தின் பொதுக்கூட்டங்கள் யாவும் உயிரோட்டத்துடன் மாநாடுகளைப் போல வெற்றியடைகின்றன. அத்தகைய வெற்றியைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டமும் அடைவதற்கு உடன்பிறப்புகளாகிய உங்களின் பங்கேற்பினை எதிர்நோக்குகிறேன்.

தி.மு.கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டங்களிலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் கழகத்தினரைப் போலப் பொதுமக்களும் ஆர்வமாகப் பங்கேற்றது, தமிழகத்தில் வீசுகிற புதிய அலையையும், அது நமக்கு ஆதரவாக இருப்பதையும் கோடிட்டுக் காட்டியது. திருச்சியிலே நடைபெறவிருக்கிற தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டமும் இலட்சக்கணக்கான பொதுமக்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெறும்.

நேரில் பங்கேற்கின்ற மக்கள் - தொலைக்காட்சி நேரலையில் காண்கின்ற மக்கள் - சமூக வலைதள காணொலிகள் வாயிலாக காண்கிற மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் முன்பாக, தமிழகத்தின் இருட்டை முழுமையாக விரட்டியடிக்கும் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டப் பிரகடனத்தை வெளியிட இருக்கிறேன்.

‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ என்பதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் நமக்கு காட்டியுள்ள இலட்சிய வழி. அதன்படி, இந்தப் பிரகடனம் ஒரு செயல்திட்ட ஆவணமாக அமையும். தி.மு.கழக ஆட்சி அமைந்ததும் நாள்தோறும் நிறைவேற்றப்படவிருக்கும் சாதனைகளின் சுருக்க வடிவம் இது. தலைவர் கலைஞர் காட்டிய இலட்சிய வழியில் இயக்கத்தைக் காத்திட நடைபோடும் உடன்பிறப்புகளான உங்களின் பேராதரவுடன், இலட்சக்கணக்கானோர் திரண்டிருக்கக்கூடிய சிறப்புப் பொதுக்கூட்டத்தில், வெளியிடப்படும் பிரகடனத்தில் உள்ளவற்றை செய்து காட்டுவோம் என்ற உறுதிமொழியை மக்கள் முன் வழங்க இருக்கிறேன். ஆட்சிக்கு வந்தபிறகு அதனை நிறைவேற்றாவிட்டால், பொதுமக்கள் கேள்வி கேட்கலாம் என்ற உரிமையினையும் வழங்க இருக்கிறேன்.

இத்தனை உறுதியாக எப்படி சொல்ல முடியும் என்று நினைக்கலாம். தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களை நம்பித்தான், உங்களில் ஒருவானான நான் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டு, உறுதிமொழியையும் வழங்க இருக்கிறேன். தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் நிறைவேற்றிக் காட்டுவார்கள் என்ற உறுதி எனக்கு உண்டு.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். வெற்றி நம் பக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கான வழி, ஆட்சியாளர்களின் அதிகார முறைகேடுகளால் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் மக்கள் விரோத ஆளுங்கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. தங்களின் வெற்றி பற்றி அக்கறை கொள்ளாமல், தி.மு.கழகத்தின் வெற்றியை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்பதையே தேர்தல் இலக்காகக் கொண்டு செயல்படுகிறார்கள். அதை வெளிப்படையாகவும் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்காகப் பல குறுக்கு வழிகளைக் கையாள்கிறார்கள்.

தேர்தல் வேலைகளில் உள்ள அரசுப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் - பாதிப்பு அறிகுறி என சந்தேகத்திற்குரியோர் - 80 வயது நிறைந்த மூத்த குடிமக்கள் ஆகியோர்க்கு தபால் வாக்குகள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மூத்த குடிமக்களுக்கான தபால் வாக்குகள் என்பதற்கான வரைமுறைகள் சரியாக வகுக்கப்படாத நிலையில், அதன் உள்நோக்கத்தை உணர்ந்த தி.மு.கழகம், இது குறித்து சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 80 வயது நிறைந்த முதியவர்கள் இம்முறை நேரிலோ அல்லது தபாலிலோ வாக்களிக்கலாம் என்ற வாய்ப்பினைத் தேர்தல் ஆணையம் அவசர கதியில் வழங்கியுள்ளது.

தபால் வாக்குகள் மீது நமக்கு அவநம்பிக்கை இல்லை. ஆனால், அவற்றைக் கையாளும் முறைகளினாலும் அதனைக் கொண்டு ஆளுந்தரப்பினர் செய்யக்கூடிய தில்லுமுல்லுகளினாலும் தேர்தல் ஆணையத்தின் அவசர நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இராதாபுரம் தொகுதியில் கழக வேட்பாளர் அப்பாவு அவர்கள் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தும், தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றும், ஆளுந்தரப்பினர் அடாவடி செய்து அவரது வெற்றியைப் பறித்தநிலையில், அடுத்த சட்டமன்றத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டும், இன்னமும் சட்டப்போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் தபால் வாக்குகளை முன்வைத்து பல தொகுதிகளில் ஆளுந்தரப்புக்கு சாதகமாக முடிவுகள் வெளியாயின. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி - தோல்வி நிர்ணயிக்கப்பட்ட தொகுதியும் உண்டு.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 80 வயது நிறைந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 17.50 இலட்சம் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை என்பது தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றக்கூடியது. அதனைப் பயன்படுத்தி முறைகேடுகள் செய்து, தி.மு.கழகத்தின் வெற்றியைத் தடுத்திட மத்திய-மாநில ஆட்சியாளர்களின் கூட்டணி பல முறைகேடான வழிகளை மேற்கொள்ளும். கழக உடன்பிறப்புகள், குறிப்பாகத் தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடுவோர், வாக்குச்சாவடி முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் இந்த தபால் வாக்குகளை கண்காணித்திட வேண்டும். களப்பணியாற்றும் உடன்பிறப்புகள் தங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட முதியவர்களை நேரடியாக வாக்குப்பதிவு செய்திட உதவிட வேண்டும்.

உடன்பிறப்புகளாகிய நீங்கள் இதனை நிறைவேற்றிக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் மாவட்ட கழகச் செயலாளர்களுடனான காணொலிக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, திருச்சி சிறப்புப் பொதுக்கூட்டத்தில் இலட்சியப் பிரகடனத்தை வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு உறுதியினை வழங்கும் இந்தப் பிரகடனத்தில் உள்ளவற்றை ஒவ்வொரு வாக்காளராகக் கொண்டு சேர்க்க வேண்டியது உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் கடமையாகும். உங்களில் ஒருவனான நானும் வீடு வீடாக, வீதி வீதியாக, கடை கடையாக, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இந்தப் பிரகடனத்தை வழங்குவது மட்டுமல்ல, அவற்றை விளக்கிடவும் ஆயத்தமாக இருக்கிறேன்.

அதுபோலவே, உடன்பிறப்புகளும் வீடு வீடாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். பரப்புரை வாகனத்தில் உள்ள வீடியோ சாதனங்கள் வாயிலாக வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தொலைக்காட்சிகள் - சமூக வலைதளங்கள் – பத்திரிகைகள் - பிற ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கான செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7-இல் இலட்சியப் பிரகடனம் வெளியீடு; மார்ச் 10-இல் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; மார்ச் 11-இல் களத்தின் கதாநாயகனான கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு. அதன்பின் பரப்புரைப் பயணம் எனப் புயல் வேகத்தில் செயல்பட வேண்டிய பொறுப்பிலே இருக்கிறேன். அதே பொறுப்பும் கடமையும் உடன்பிறப்புகளான உங்களிடமும் இருக்கிறது.

கழகம் போட்டியிடும் தொகுதிகளிலும் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் தலைவர் கலைஞர் அவர்களே வேட்பாளராக நிற்கிறார் என்ற எண்ணத்துடன் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். வாக்கு சேகரிப்பதற்கான குழுக்களை அமைத்து, தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் வீடுகளை நேரடியாகச் சென்றடைந்து, தொலைநோக்கு செயல்திட்டப் பிரகடனத்தை வாக்காளர்களிடம் வழங்கி, கழக ஆட்சி அமைந்ததும் இவற்றை நிறைவேற்றிட இருக்கிறோம் என்பதை எடுத்துரைத்து, வெற்றிக்கான வாக்குகளை உறுதி செய்திட வேண்டும்.

களம் தயார். நம் கைகளில் கணைகளும் தயார். அதனை ஏவுவதற்கான இலக்கும் தெளிவாக உள்ளது. ஜனநாயகப் போர்க்களமான தேர்தல் களத்தில் அதனை எப்படி, எவ்வாறு ஏவிட வேண்டும் என்பதற்கான பயிற்சிப் பாசறைதான் திருச்சியிலே மார்ச் 7-ஆம் நாள் நடைபெற இருக்கிற தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ சிறப்புப் பொதுக்கூட்டம். தீரர் கோட்டத்தில் வெளிப்படும் அந்த முதல் முழக்கம், திக்கெட்டும் வெற்றி முழக்கமாகட்டும்! வெற்றிக்கான தொடக்கமாக அமையட்டும்! தமிழகத்தைக் கவ்வியுள்ள பத்தாண்டு கால இருட்டை விரட்டட்டும்! உடன்பிறப்புகளின் வருகையால் – பங்கேற்பால் - களப்பணியால் அவலம் மிகுந்த அ.தி.மு.க. ஆட்சி முடியட்டும். உதயசூரியனின் வெற்றிக் கதிர்களின் வெளிச்சத்தில் தமிழகம் விடியட்டும்!  என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Udayassun ,Stalin , Disgusted by the field work, the AIADMK Let the rule end. Let Tamil Nadu shine in the light of the rays of victory of Udayasooriyan: A leaflet for MK Stalin's volunteers !!!
× RELATED உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட சீமான்