தே.மு.தி.க அதிர்ச்சி!: பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் இறுதிப்பக்க அட்டையில் தேமுதிக-வின் முரசு சின்னம் இல்லை..!!

சென்னை: பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் கடைசி பக்க அட்டையில் கூட்டணி கட்சியான தேமுதிக சின்னம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக-வின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் காணொலி வாயிலாக நிகழ்சியில் கலந்துகொண்டனர். புத்தகமாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையின் கடைசி பக்க அட்டையில் வாக்களிக்க வேண்டிய சின்னங்கள் என்று குறிப்பிட்டு மாம்பழம், இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்கள் மட்டுமே உள்ளன.

தேமுதிக-வின் முரசு சின்னம் இல்லாதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. தேர்தல் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ராமதாசும், அன்புமணியும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண் என ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது குறுக்கிட்ட அன்புமணி, மதிப்பெண் அளிக்க விரும்பவில்லை என்றார். தமிழக அரசு உண்மையிலேயே வெற்றிநடை போடுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், தமிழக அரசுக்கு ஆலோசனைகள் வழங்கி அதனை செயல்படுத்துமாறு வற்புறுத்த தாங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

பாமகவின் கோரிக்கைகளை அதிமுக அரசு எளிதாக எடுத்துக்கொள்கிறதா?  என்ற கேள்விக்கு, தேர்தல் முடிந்த உடன் தங்கள் போராட்ட தன்மை தெரியும் என்றார். பாமக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: