கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட விஜய் வசந்த் விருப்பமனு.!!!!

சென்னை: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச்.வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்த்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் விதிகளின்படி தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும்.

ஆனால்,  தமிழக சட்டமன்ற தேர்தலுடன் குமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தமிழகம் சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஏப்ரல்-6-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இதயைடுத்து, அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட எச்.வசந்த்குமார் மகன் விஜய் வசந்த் சென்னை சத்யமூர்த்திபவனில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

இதனைபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகனுமான கார்த்தி சிதம்பரம் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி

* தேர்தல் தேதி: ஏப்ரல்-6-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12-ம் தேதி

* வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19-ம் தேதி

* வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20-ம் தேதி

* வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ம் தேதி

* வாக்கு எண்ணிக்கை: மே-2-ம் தேதி

Related Stories:

>