கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம்!: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் உள்ள பிரதமர் மோடியின் படத்தை நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் நாடு முழுவதும் போடப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடைப்பெற்றுள்ளது. இது தேர்தல் விதிமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பெட்ரோல் பங்குகளில் உள்ள பிரதமர் மோடியின் படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பதை நீக்க வேண்டும் என்று அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இருப்பதாக மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: