கொள்முதல் செய்ய காலதாமதம் நெல் மூட்டைகள் தேக்கத்தால் விவசாயிகள் கவலை-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பேராவூரணி : பேராவூரணி பகுதியில் அரசு கொள்முதல் நிலையங்களில், நெல்மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதியில், பேராவூரணி, பூக்கொல்லை, பழைய பேராவூரணி, முடச்சிக்காடு, சொர்ணக்காடு, ரெட்டவயல், குருவிக்கரம்பை உள்ளிட்ட பகுதிகள் உள்பட 26க்கும் மேற்பட்ட இடங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 9 ஆயிரத்து 840 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்தது போக தற்போது பெரும்பாலான இடங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அரவைக்கோ, சேமிப்பு கிடங்கிற்கோ அனுப்பி வைக்காமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் வைக்க இடமின்றி விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்ய அதிகாரிகள் காலதாமதப்படுத்துகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெயிலால் எடை குறைவு

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுச்சாமி கூறியது, பேராவூரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 26 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. பேராவூரணி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள திறந்தவெளி நெல் கிடங்கில் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அங்கும் நெல்லை சேமித்து வைக்க போதிய இடம் இல்லை. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை ஏற்றிச் செல்ல 22 லாரிகள் மட்டும் இயக்கப்படுகிறது.

சுமைப்பணி தொழிலாளர்கள், லாரி பற்றாக்குறை காரணமாக, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒவ்வொன்றிலும் சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் வரை தேங்கி கிடக்கின்றன. இடப்பற்றாக்குறை, மற்றும் கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகள், தற்போதுள்ள கடும் வெயில் காரணமாக காய்ந்து, எடைக்குறைவு ஏற்படும் என பயந்து அதிகாரிகள் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் என்றார்.

Related Stories:

>