மடத்துக்குளம் பகுதியில் வைக்கோல் விற்பனை தீவிரம்

உடுமலை : உடுமலை,மடத்துக்குளம் பகுதியில், நெல் அறுவடை தொடங்கி நடந்து வரும் நிலையில், வைக்கோல் விற்பனை தீவிரமடைந்துள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நெல் பிரதான பயிராக உள்ளது. அறுவடைக்குப் பின் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கு உலர் தீவனமாகப் பயன்படுகிறது.  ஆண்டு முழுவதும் இருப்பு வைத்துப் பயன்படுத்தும் தீவனமாக உள்ளதால், இதற்கு எப்போதும் தேவை உள்ளது. நடப்பாண்டு அறுவடைக்கு பின்பு, வைக்கோல்கள் கட்டுகளாக விற்பனையாகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால், பெரும்பாலான இடங்களில், இயந்திரங்கள் வாயிலாகத் தான் அறுவடை நடக்கிறது. இதனால், வைக்கோல் கட்டு உருவாக்குவதற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.வயலில் பரவிக்கிடக்கும் வைக்கோல் மீது, இயந்திரங்களை இயக்கும்போது அவற்றை ஒன்று சேர்த்து உருளை வடிவ கட்டுகளாக்குகின்றன.

ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள வைக்கோல், 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு கட்டு உத்தேசமாக, ரூ.225க்கு கொடுக்கிறோம். ஒரு ஏக்கர் பரப்பில், 20 முதல் 25 கட்டு கிடைக்கிறது. பல மாவட்டங்களுக்கும், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்போரும் வைக்கோல் கட்டுகளை வாங்கி செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: