இருமாநில அதிகாரிகள் ஆலோசனை மதுபானம் கடத்தினால் குண்டாசில் கைது-கலால் ஆணையர் எச்சரிக்கை

புதுச்சேரி : தமிழகம், புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் இருமாநில எல்லைகளில் மதுபானம் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனிடையே தேர்தலை அமைதியாக நடத்தவும், மதுபானம், சாராயம் கடத்தலை தடுக்கவும் இருமாநில அதிகாரிகளும், காவல்துறையும் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலக கருத்தரங்கு கூடத்தில் நேற்று காலை நடைபெற்றது.

கலால் துறை ஆணையர் அபிஜித் விஜய் சௌத்ரி தலைமை தாங்கினார். ஏடிஜிபி அனந்தமோகன், சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடாரா, கலால் துணை ஆணையர் சுதாகர், இருமாநில கலால் அதிகாரிகள், போலீஸ் எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மதுபானங்கள் கடத்தலை இணைந்து தடுப்பது, ரவுடிகளை ஒடுக்குவது, தேர்தல் பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வது தொடர்பாக விவாதித்து அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டத்திற்குப்பின் கலால் ஆணையர் அபிஜித் விஜய் சவுத்ரி நிருபர்களிடம் கூறும்போது, மதுபானம் கடத்தலை தடுக்க மது மற்றும் சாராயக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளோம். தனி நபருக்கு மதுபானம், சாராயத்தை அரசு நிர்ணயித்த அளவு தான் விற்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம். மொத்தமாக மதுபானம் யாராவது வாங்கினால் அதுபற்றி கலால் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளோம். தனியார் மதுபான ஆலைகள் மற்றும் அரசு வடிசாராய ஆலைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். அங்கு, மதுபானம், சாராய உற்பத்தி, விற்பனை விவரங்களை கலால் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

மதுபான கடத்தல், மொத்தமாக மதுபானங்களை விற்பது உள்ளிட்டவற்றை கண்காணிக்க புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் அனைத்து மதுக்கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானம், சாராயம் கடத்துபவர்கள் யார்? என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மது கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.கூட்டத்தில், புதுச்சேரியில் தனிநபர் மதுபானம் விற்பனை அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக 9 லிட்டர் பீர், 4.5 லிட்டர் பிராந்தி, 4 லிட்டர் சாராயம் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என மது விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>