பாதாள சாக்கடை அடைப்பால் பொது கழிப்பிடம் மூடல்-குடியிருப்புவாசிகள் அவதி

திருப்பூர் : திருப்பூரில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் பொது கழிப்பிடம் மூடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.திருப்பூர் எஸ்.வி காலனி ஜோதி நகர் முதல் வீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்களில் பெரும்பாலானோர் கூலி தொழிலாளர். இங்கு பெரும்பாலான வீடுகளில் கழிப்பிட வசதி கிடையாது. கழிப்பிடம் கட்டுவதற்கு இட வசதியும் கிடையாது. இத்தகைய, சூழ்நிலையில் அப்பகுதியில் ஒரு பொது கழிப்பிடம் மட்டும் உள்ளது. இதனை, அப்பகுதி பொதுமக்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கும் மற்றும் குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கழிவறையில் இருந்து கழிவுகள் செல்லும் பாதாள சாக்கடை வழித்தடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவறையை பயன்படுத்தினால், கழிவுகள் கசிந்து அப்பகுதியில் உள்ள பொது சாக்கடையில் சென்று வருகிறது. இதன், காரணமாக ஜோதி நகர் முதல் வீதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசு மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மேலும், அப்பகுதி பொதுமக்கள் தினமும் கழிவறை பயன்படுத்த முடியாத நிலையில் வேறு இடத்தில் உள்ள கழிப்பிடத்தை தேடி வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கடந்த வாரத்தில் திடீரென பொது சாக்கடையில் மனித கழிவுகள் வர துவங்கியது. இதனால், ஜோதி நகர் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால், எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் மூடப்பட்டுள்ளது. தற்போது கழிவறை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறது என்றனர்.

Related Stories:

>