'தமிழகம் உட்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம்': தமிழிசை சவுந்தரராஜன்..!!

புதுச்சேரி: தமிழகம் உட்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 12,941 முன்கள பணியாளர்களுக்கும் 945 பொதுமக்களுக்கும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் குறைந்த அளவிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதால் அதனை அதிகரிக்க செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை நிலை ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி, மகேஸ்வரி, தலைமை செயலாளர் அஷ்வினி குமார், டி.ஜி.பி. கிருஷ்ணய்யா, சுகாதாரத்துறை செயலர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சில மாநிலங்களில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்கள் முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகம் உட்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

Related Stories: