எழிலூர் ஊராட்சி நேமம் பகுதியில் சேதமடைந்த தாய்வாய்க்கால் மதகு பாலம் புதுப்பிக்கப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு

*குரலற்றவர்களின்  குரல்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் ஊராட்சி நேமம் பகுதியில் 300 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களுக்கு பாசன வசதி தரும் தாய்வாய்க்காலில் உள்ள தெக்கடி மதகு பாலம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பாலத்தடியிலிருந்து தெற்குதெரு வரை பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு போடவில்லை என்பதால் பாலம் கட்டாமல் சாலை பணி மட்டும் நடைபெறுகிறது. இதுகுறித்து நேமம் கிராம கமிட்டி தலைவர் பாலசுப்பிரமணியன, பொருளாளர் தண்டாயுதபாணி, விவசாய சங்க தலைவர் செல்வம், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் கூறிகையில்,நேமம் கிராமத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் 300 ஏக்கர் விவசாய நிலத்திற்கும் இந்த மதகுபாலம் வழியாக தண்ணீர் செல்கிறது.

தாய் வாய்க்காலில் பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டி தரவலியுறுத்தி மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமங்களில் சாலை அமைக்கும் பணியின்போதே பழுதான பாலங்களும் திட்டபணிகளில் சேர்த்து எஸ்டிமேட் போடப்படும். ஆனால் பாலம் வேலை பணிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சாலை பணிகளை மட்டுமே செய்து வருகின்றனர்.

நூறு ஆண்டு பழமை வாய்ந்த இந்த பாலம் பழுதடைந்து 10 ஆண்டுகளாகியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து கோரிக்கை மனுக் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. சாலை பணியுடன் புதிய பாலம் கட்டும் பணியை உடனே துவங்க வேண்டும் இல்லை என்றால் விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டகள் நடத்தப்படும் என்றனர்.

Related Stories: