நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார்- டெராஸ் சாலை சீரமைக்கப்படுமா?

பஸ் போக்குவரத்து நிறுத்தியதால் தினமும் 8 கி.மீ. நடக்கும் மக்கள்

கூடலூர் : நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டிஆர்லீஸ், பெல்வியூ, டெராஸ் ஆகிய பகுதிகள் விவசாயிகள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகள். இப்பகுதிக்கு ஊட்டி கூடலூர் பிரதான சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியில் இருந்து டெராஸ் தேயிலைத் தோட்டம் வரை 8 கி.மீ. தூரத்திற்கு சாலை உள்ளது.

இதில், பெல்வியூ பகுதியில் இருந்து டெராஸ் தேயிலை தோட்டம் வரை நான்கு கி.மீ. நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டிலும், டி.ஆர்.பஜார் பகுதியில் இருந்து பெல்வியூ பகுதி வரை நான்கு கி.மீ. நடுவட்டம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. நடுவட்டம் பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள இந்த சாலை, சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது.

பேரூராட்சி சார்பில் கடந்தாண்டு ஒரு கி.மீ. தூரத்திற்கு சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மீதம் உள்ள 3 கி.மீ. சாலை மழைக் காலங்களில் சேதமடைந்து மண் சாலை போல் காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்தாகி நிற்கிறது. அடிக்கடி வாகனங்கள் பழுதாவதால் இந்த சாலை வழியாக ஊட்டியில் இருந்து டெராஸ் தேயிலை தோட்டம் வரை இயக்கப்பட்ட அரசுப் பேருந்து போக்குவரத்தும் ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டு உள்ளது.

பேருந்து போக்குவரத்து இல்லாததால் இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். காலை நேரத்தில் ஊட்டி வரை இயக்கப்படும் அரசு பேருந்து இயக்கப்படாத காரணத்தால் தொழிலாளர்கள், பள்ளி,  கல்லூரி மாணவர்கள் மற்றும்  ஊட்டியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

தினமும் 8 கி.மீ. தூரம் நடந்து டிஆர் பஜார் வரை சென்று அங்கிருந்து ஊட்டி செல்லும் பேருந்துகளில் ஏறி செல்ல வேண்டும். பேருந்து இயக்க கோரி பொதுமக்கள் போக்குவரத்து நிர்வாகத்தை அணுகியபோது சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தால் பேருந்து இயக்க முடியாது என்றும், சாலை பராமரிப்பு முடிந்த வரை பேருந்து இயக்க முடியும் என நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

சாலை பராமரிப்பு குறித்து நடுவட்டம் பேரூராட்சி அலுவலகத்துக்கும், மாவட்ட கலெக்டருக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையை சீரமைத்து மீண்டும் பேருந்து போக்குவரத்தை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடுவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, இந்த சாலை பணிகளுக்கான திட்டம் தயாரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும் சாலை பணிகள் விரைவில் முடிக்கப்படும் என கூறினார்.

Related Stories: