100வது நாளை எட்டியது டெல்லி விவசாயிகளின் போராட்டம் : கேஎம்பி ஜிடி சாலையை 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டம்

டெல்லி : மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானது எனக் கூறி நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி சமைத்து சாப்பிட்டு போராடி வருகின்றனர் விவசாயிகள். பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும், குளிர், மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் டிராக்டர் பேரணி, சக்கா ஜாம் என பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர் விவசாயிகள்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 11 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று பதாகைகளை ஏந்திக் கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நூறாவது நாளான இன்றைய தினம் கேஎம்பி ஜிடி சாலை எனப்படும் குண்ட்லி - மானேஸர்-பல்வால் அதிவேக விரைவுச்சாலையை இன்று 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் வரையில் போராட்டத்தை தொடர்வதே விவசாயிகளின் ஒரே குறிக்கோளாக உள்ளது.

Related Stories: