பேரவையில் சட்டையை கழற்றி காங்கிரஸ் எம்எல்ஏ போராட்டம்: அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை

பெங்களூரு: என் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோரின் சதி மறைந்துள்ளது என  எம்எல்ஏ சங்கமேஸ்வர் கூறினார். பெங்களூரு விதான சவுதாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மீது விவாதம் தொடங்கும் என  பேரவை தலைவர்  விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி அறிவித்தார். அதற்கு  காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது  அதில் ஈடுபட்ட பத்ராவதி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஸ்வர் திடீரென்று தனது சட்டையை கழற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 காங்கிரஸ் உறுப்பினர் சங்கமேஸ்வரின் இந்த நடவடிக்கையால் சபாநாயகர் காகேரி கடும் கோபம் அடைந்தார். அத்துடன் உள்துறை அமைச்சரும்  பேரவை விவகார துறை அமைச்சருமான பசவராஜ் பொம்மை, சங்கமேஸ்வர்  மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் காகேரி, பேரவை உறுப்பினர் சங்கமேஸ்வர் விதி 348க்கு எதிராக அவையில் தரக்குறைவாக நடந்துள்ளார். எனவே,  வருகிற 12ம்தேதி வரை அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளக்கூடாது என்று அறிவித்தார். இது தொடர்பாக விதான சவுதாவில்  பத்ராவதி தொகுதி  எம்எல்ஏ சங்கமேஸ்வர் கூறியதாவது: ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதியில் பாஜவின் செல்வாக்கு முற்றிலும் ஒழிந்துவிட்டது. எம்எல்ஏ  தேர்தல் முதல் தாலுகா, பஞ்சாயத்து தேர்தலில் பாஜ செல்லாக்காசாக மாறிவிட்டது. தொகுதி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்காத பாஜ அரசு என் மீது  கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து  சதி வேலையில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் மனு அளித்தேன். ஆனாலும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக  பேரவையில் தனி ஆளாக போராட்டம் நடத்தினேன். எனது சட்டையை கழற்றி சபாநாயகருக்கு எதிர்ப்பை காண்பித்தேன். பாஜ அமைச்சர்களை போல்  ஆபாச படம் பார்த்தேனா? அல்லது அது போன்ற தரமற்ற செயலில் ஈடுபட்டேனா? பேரவையில் சட்டையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக  என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதனால் பயந்துவிடமாட்டேன். பாஜவுக்கு செல்வாக்கு சரிந்துள்ளதால் வகுப்பு கலவரத்தை  ஏற்படுத்திக்கொள்வதற்காக முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும்  எம்பி ராகவேந்திரா ஆகியோர் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.  அவர்களின் சதி வேலைகள் எதுவும் பத்ராவதி தொகுதி மக்களிடம் எடுபடாது. சபாநாயகர் என் மீது எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: