கர்நாடக மாநில அரசியலில் செக்ஸ் புகாரில் சிக்கி அமைச்சர் பதவி இழந்த எம்எல்ஏக்கள்: கேலிகூத்தாகிறதா ஜனநாயகம்

பெங்களூரு: கர்நாடக மாநில அரசியலில் பல கால கட்டங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செக்ஸ் புகாரில் பதவி இழந்துள்ள சம்பவங்கள்  நடந்துள்ளது. மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சி இருந்தபோது கடந்த 2010 மே மாதம் உணவு வழங்கல் மற்றும் பொது  வினியோகதுறை அமைச்சராக இருந்த ஹரதாள் ஹாலப்பா, அவரது நண்பரின் மனைவியிடம் தகாத உறவு கொண்டிருந்ததாக சிடி வெளியாகியது.  இது மீடியாக்களில் உலா வந்ததை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ராஜினாமா முழக்கம் முன்வைத்ததால் வேறு வழியில்லாமல் அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்தார். மாநில அரசியலில் செக்ஸ் புகாரில் ராஜினாமா செய்த முதல் நபரானார்.

கடந்த 2012 பிப்ரவரி 7ம் தேதி பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சியில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தபோது,  கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த லட்சுமண்சவதி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணாபலேமர், பெண்கள் மற்றும்  குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த சி.சி.பாட்டீல் ஆகியோர் பேரவையில் செல்போனில் செக்ஸ் படம் பார்த்து கொண்டிருந்ததை  எலக்ட்ரானிக் மீடியா ஒன்று பகிரங்கப்படுத்தியதால் மூன்று பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். பின் கடந்த 2013ல் நடந்த தேர்தலில்  லட்சுமண்சவதி, சி.சி.பாட்டீல் வெற்றி பெற்றனர். கிருஷ்ணா பாலேமர் தோல்வியடைந்தார்.

அதே காலகட்டத்தில் அமைச்சராக இருந்த எம்.பி.ரேணுகாச்சார்யா மீது நர்ஸ் ஜெயலட்சுமியும் மற்றொரு அமைச்சராக இருந்த எஸ்.ஏ.ராமதாஸ் மீது  பிரேமகுமாரி என்பரும் செக்ஸ் புகார் கொடுத்ததும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் இவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு  செய்யப்படவில்லை. அதனால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதை தொடர்ந்து சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ்  ஆட்சியில் அமைச்சராக இருந்த எச்.ஒய்.ேமட்டி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆயுஷ் துறை அலுவலகத்தில் தினக்கூலி ஊழியராக  பணியாற்றி வந்த பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துள்ளதாக சிடி வெளியாகிய பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் அவரும் பதவியை ராஜினாமா  செய்தார். தற்போது மீண்டும் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சியில் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மீது செக்ஸ் புகார் சிடி வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் சேவையில் இருப்பவர்கள் நீதியாகவும் நேர்மையாகவும்  இருக்காமல் இப்படி சமூகத்தில் கேவலமாக பேசப்படும் நபராக மாறும்போது, மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். மற்றவர்களுக்கு  முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்களே விமர்சன பொருளாக மாறும்போது, ஜனநாயகம் கேலி கூத்தாகி விடும் என்பது சிந்தனையாளர்களின்  கருத்தாக இருப்பது மட்டுமில்லாமல், அவர்கள் சார்ந்த கட்சி தலைமையும் இப்படி கீழ்தரமான செயல்களில் ஈடுப்படுவோரை ஆதரிக்காமல் ஒதுக்க  வேண்டும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories: