கூடலசங்கமாவில் மது பாட்டிலுக்கு பூஜை: பக்தர்கள் வினோத வழிபாடு

விஜயபுரா: பசவண்ணர் நிறுவிய கூடலசங்கமாவில் மது பாட்டிலுக்கு பூஜை செய்து உணவு எடுத்து கொள்ளும் புதிய வழக்கத்தை 30வது ஆண்டாக  தொடர்கின்றனர். இது சிவ பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிராமண குலத்தில் பிறந்த பசவண்ணர் உலகில் ஏற்ற-தாழ்வு இல்லாத  சமூகம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தின் ஆன்மீக சேவையுடன், சமூக புரட்சியும் மேற்கொண்டார். கோயில்கள் குறிப்பிட்ட வகுப்பினருக்கு  மட்டும் சொந்தம் என்பதை உடைத்தெறிந்து, அனைவரும் வந்து சேவிக்கும் புண்ணிய ஸ்தலம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் நிரூபித்தார்.

தன்னை நாடி வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்காகவும், சிவநெறியை போற்றும் வகையில் விஜயபுரா  மாவட்டத்தில் கூடல சங்கமம் என்ற புனிதஸ்தலத்தை உருவாக்கினார்.

இது இன்றளவும் சிவ பக்தர்களின் சிவலோகமாகவே மதித்து பூஜிக்கப்படுகிறது. விஜயபுரா மாவட்டத்தில் உள்ள சோட்டியாள கிராமத்தில் சொன்டியாள  முத்தண்ணாசாமி கோயில் உள்ளது. இதில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேரோட்டம் நடப்பது வழக்கம். இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள், விழா  முடிந்ததும் கிருஷ்ணா மற்றும் மலபிரபா நதியில் நீராடிய பின், கூடல சங்கமம் வந்து சங்கமநாதர் மற்றும் உலக ஆன்மீக குரு பசவண்ணரை தரிசனம்  செய்து செல்வது வழக்கம். கடந்த 32 ஆண்டுகளுக்கு முன் சொன்டியாள தேரோட்டத்திற்கு வரும் பக்தர்கள், கூடல சங்கமம் வந்து, கோயில்  வளாகத்தில் மது பாட்டிலுக்கு பூஜை செய்து குடித்தபின், உணவு சாப்பிடும் புதிய கலாச்சாரத்தை தொடங்கினர். இப்படி செய்தால், பசவண்ணர் மகிழ்ச்சி  அடைவார் என்ற புதிய கதையை அவிழ்த்து விட்டனர். மூட நம்பிக்கையாக தொடங்கிய வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

சோட்டியாள கிராமத்தில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் முத்தண்ணாசாமி கோயில் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் தேரோட்டம்  நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்டு ஒரு கூட்டம் நேற்று கூடல சங்கமம் வந்தனர். முதலில்  கிருஷ்ணா நதியில் நீராடிய பின், கோயில் வளாகத்தில் வெள்ளை துணி மீது மது பாட்டீல் மற்றும் உணவு வைத்தனர். அதை சுற்றி அமர்ந்தனர்.

பசவண்ணரின் பாடல்களை பாடி ஆராதனை செய்த பின், மது பாட்டிலுக்கு பூஜை செய்து அனைவரும் குடித்தனர்.

அதை தொடர்ந்து உணவு சாப்பிட்டனர். இந்த மூட பழக்கத்தை தடுக்கும் உரிமை கூடல சங்கமா மேம்பாட்டு வாரியத்திற்கு இருந்தும், பிரச்னை  ஏற்படும் என்ற அச்சத்தில் தவிர்த்து வருகிறார்கள். புனிதஸ்தலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மூட நம்பிக்கை என்ற பெயரில் அதை சீர்குலைக்க  அனுமதிக்ககூடாது என்பது பெரும்பான்மையான பக்தர்களின் கருத்தாகவுள்ளது.

Related Stories:

>