×

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பெங்களூரு: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்க வேண்டும், 15 ஆண்டுகள் பயன்படுத்திய லாரிகளை இயக்க தடை, மூன்றாவது  நபர் இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்யவில்லை எனில் வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம்  தொடங்கப்படும் என்று தென்மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்ட் சங்கம் எச்சரித்துள்ளது. இது குறித்து பெங்களூருவில் சங்க தலைவர்  பி.சென்னாரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் மொ.பெரியசாமி உள்பட நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், பெட்ரோல் டீசல்  விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

மத்திய அரசு உடனடியாக பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.சாலையில் இயங்கும் சரக்கு வாகனங்கள் ஒவ்வொரு  ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் தாக்கல் செய்வதுடன் பிட்னஸ் சர்ட்டிபிகேட் பெறுகிறார்கள். அப்படி பெற்றால்  மட்டுமே சரக்கு வாகனங்கள் சாலையில் இயங்க முடியும். ஆர்டிஓ சான்றிதழ் ெபறாமல் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்  தவறில்லை. ஆனால் 15 ஆண்டுகள் இயங்கிய வானங்கள் இயக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவருவது என்ன நியாயம்?  தற்போதைய  சூழ்நிலையில் புதிய லாரிகள் வாங்குவது கஷ்டமாகும். ஆகவே இத்திட்டம் கைவிட வேண்டும். மேலும் மோட்டார் வாகன சட்டம் பின்பற்றாமல்  இருப்பவர்கள் மீது ரூ.100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது அதை ரூ.500ல் இருந்து ரூ.20 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அபராதம் வசூலிக்கும் உரிமையை மாநில அரசிடம்  ஒப்படைத்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் சரக்கு லாரிகளை நிறுத்தி அபராதம் வசூலிக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள  இச்சட்டம் மிகவும் அநியாயமானது என்பதால், அதை வாபஸ் பெற வேண்டும். இதற்கு முன் நாட்டில் நான்கு இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருந்தது.  தற்போது தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (ஐஆர்டிஏஐ)  என்ற இன்சூரன்ஸ் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து 28 தனியார் நிறுவனங்கள்  இயங்கிவருகிறது.

இவைகள் சொந்த பாதிப்பு (Own Damage) மற்றும் மூன்றாவது நபர் இன்சூரன்ஸ் (Third Party Insurance) உள்ளது. இதில் சொந்த பாதிப்பு  பிரிமியம் செலுத்தும் சலுகைகள் உள்ளது. ஆனால் மூன்றாவது நபர் இன்சூரன்ஸ் செலுத்தும் விஷயத்தில் பாதிப்பு உள்ளது. கடந்த 2001ம் ரூ.1,250ஆக  இருந்த பிரிமியம் தொகை 2021ம் ஆண்டில் ரூ.45 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை லாரி உரிமையாளர் எப்படி ஏற்க முடியும். இதனால்  கண்டிக்கிறோம். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேற்கண்ட எங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறினால் வரும் ஏப்ரல்  5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

Tags : Southern Lorry Owners Association , Indefinite strike from April 5 if demands are not met: Southern Lorry Owners Association warns
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை