×

மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகம்-காங்கிரஸ் மேட்ஜ் பிக்சிங்-பா.ஜ

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் கட்சி மீண்டுடெழுந்து வருகிறது என்று காங்கிரசும், மேட்ஜ் பிக்சிங் மூலம்  எங்களை தோற்கடித்து விட்டார்கள் என்று பா.ஜவும் கூறியுள்ளன. டெல்லி மாநகராட்சிகளில் காலியாக உள்ள 5 வார்டுகளுக்கு இடைத்தேர்தல்  நடந்தது. இதில் 4 தொகுதிகளில் ஆம்ஆத்மியும், ஒரு தொகுதியில் காங்கிரசும் வெற்றி பெற்றது. 3 மாநகராட்சியும் 15 ஆண்டுகள் தன்வசம்  வைத்திருக்கும் பா.ஜ படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பா.ஜவின் கோட்டை என்று கருதப்பட்ட ஷாலிமார்பாக் வடக்கு வார்டை ஆம்ஆத்மியிடம்  இடைத்தேர்தலில் பறிகொடுத்துள்ளது. இந்த தேர்தலில் 4 இடங்களை கைப்பற்றியதால் 2022ல் நடைபெற உள்ள 3 மாநகராட்சிகளை ஆம்ஆத்மி  கைப்பற்றும்என்று ஆம்ஆத்மி நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் சவுத்திரி சுபையர் கான் இந்த தேர்தலில் சவுகான் பங்கர்  வார்டில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம்ஆத்மி வேட்பாளரும்,  முன்னாள்  எம்எல்ஏவுமான முகமது இஸ்ரக் கானை 10 ஆயிரத்திற்கும் அதிகமானவாக்கு  வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்தார். இதுபற்றி  காங்கிரஸ் மாநில தலைவர் அனில்குமார் கூறியதாவது: 5 வார்டு இடைத்தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது காங்கிரஸ் தனது எதிரிகளுக்கு எதிராக  வலுவாக தடம் பதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2022ல் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் இது தெளிவாக தெரியும். அதிலும்  குறிப்பாக சவுகான்பங்கர் வார்டில் காங்கிரஸ் பெற்ற வெற்றி என்பது மக்கள் நம்பிக்கையை மீண்டும் காங்கிரஸ் பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.  இது எங்களுக்கு சாதகமான ஒன்று. மேலும் எதிரிகளுக்கு இதில் வலுவான செய்தி உள்ளது. காங்கிரஸ் மீண்டும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று  டெல்லி மக்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது.

பா.ஜ தலைமையிலான மாநகராட்சியில் நடந்த ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், டெல்லியை சூறையாடிய ஆம்ஆத்மி அரசுக்கு எதிராகவும்  இடைத்தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக 15 ஆண்டுகளாக மாநகராட்சியை தவறாக ஆட்சி செய்து வந்த பா.ஜவை மக்கள்  புறக்கணித்து உள்ளனர். சட்டமன்ற தேர்தலை கணக்கிடும் போது காங்கிரசுக்கு இந்த தேர்தலில் 6 சதவீதம் வாக்கு வங்கி கூடியிருக்கிறது. ஆனால்  பா.ஜவுக்கு 10 சதவீதமும், ஆம்ஆத்மிக்கு 5.50 சதவீதமும் வாக்கு வங்கி சரிந்து இருக்கிறது. ராகுல், பிரியங்கா தலைமையின் கீழ் காங்கிரஸ் தற்போது  வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு கூறினார்.

ெடல்லி பா.ஜ தலைவர் ஆதேஷ்குப்தா தேர்தல் முடிவு குறித்து கூறியதாவது:  மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் காங்கிரஸ்  மற்றும் ஆம்ஆத்மி இடையே மேட்ஜ்பிக்சிங் நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து பா.ஜவை வீழ்த்தி இருப்பது தேர்தல்  முடிவுகளால் வெளிப்பட்டுள்ளது. ஷாலிமார்பாக்கில் காங்கிரஸ் ஓட்டு விகிதம் குறைந்து இருப்பதும், சவுகான் பங்கரில் ஓட்டு விகிதம் உயர்ந்து  இருப்பதும் பா.ஜவுக்கு எதிராக ஆம்ஆத்மியும், காங்கிரசும் இணைந்து இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் தோல்விக்கான காரணம் குறித்து  கட்சி விரிவாக அலசி ஆராய உள்ளது.

2022ம் ஆண்டு நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் கட்சி இன்னும் வலுவான உத்வேகத்துடனும், வழிமுறைகளுடனும் களமிறங்கும். அரசியல்  கட்சிகளை பொறுத்தவரை வெற்றி அல்லது தோல்வி என்பது இறுதி அல்ல. ஆனால் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் நாங்கள்  வெற்றி பெறுவது உறுதி. அதற்கு ஏற்றார்போல் எங்கு தவறு நடந்தது என்பதை கட்சி கண்டறிந்து, அதை விரைவில் சரிசெய்யும். அதனால் இப்போது  நடந்த இடைத்தேர்தல் ஒன்றும் அரை இறுதி அல்ல. அது ஒரு நம்பிக்கை அளிக்கும் தேர்தல் அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ பதவி விலக வேண்டும்
ஆம்ஆத்மி மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் துர்கேஷ் பதக் கூறுகையில்,’ மாநகராட்சி இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பு ஏற்று  மாநகராட்சி பதவிகளை பா.ஜ ராஜினாமா செய்ய வேண்டும். இடைத்தேர்தல் முடிவுகள் டெல்லி மக்கள் மனநிலையை காட்டுகிறது. அடுத்த ஆண்டு  நடைபெறும் மாநகராட்சி தேர்தலின் போது பா.ஜ அதிகாரத்தில் இருந்து தூக்கி வீசப்படும்’ என்றார். ஆம்ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா கூறுகையில்,’  மாநகராட்சி தேர்தலுக்கு இன்னும்  ஒரு வருட காலம் மட்டுமே இருக்கும் நிலையில் நடந்த அரை இறுதியில் ஆம்ஆத்மி  அமோக வெற்றி  பெற்றுள்ளது. 15 ஆண்டு காலமாக மாநகராட்சிகளில் ஊழல் மலிந்த  ஆட்சி நடத்திய பா.ஜவை டெல்லி மக்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய  நேரம்  இது’ என்றார்.

தோல்வி வருத்தம்தான்
பா.ஜ மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,’ மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில்  தோல்வி என்பது வருத்தம்தான். அதற்கான 2022ல் நடைபெற  உள்ள தேர்தலில் நாங்கள்  தோற்று விடுவோம் என்பது அர்த்தம் அல்ல. 2016ம் ஆண்டும் மாநகராட்சியில் 13  வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.  இதில் 3ல் மட்டுமே பா.ஜ வென்றது.  ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தலா 5 ல் வென்றது. ஆனால் 2017 மாநகராட்சி  தேர்தலில் நாங்கள் அதிக  பலத்தோடு வென்று, 3 மாநகராட்சிகளையும்  கைப்பற்றவில்லையா?’ என்று கூறினார்.

* 2007ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளும் பா.ஜ வசம் உள்ளன.
* 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ மொத்தம் உள்ள 272 வார்டுகளில் 184 வார்டுகளை கைப்பற்றியது
* ஆனால் தற்போது 5 வார்டு இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி அதிகபட்சமாக 46.10 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. பா.ஜவுக்கு இரண்டாம் இடம்  கிடைத்துள்ளது. அந்த கட்சி 27.29 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
* ஒரு இடத்தில் வென்ற காங்கிரஸ் கட்சி 21.84 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.Tags : Congress ,Madge Pixing ,BJP , Corporation by-election results favor us-Congress Madge Pixing-BJP
× RELATED அரசியல் விளையாட்டில் அதிரப்போகுது...