ஓடிடி.யில் ஆபாச படங்களை முறைப்படுத்த விதிமுறைகள்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘ஓடிடி தளங்களில் சில குறிப்பிட்ட வகையான ஆபாச படங்கள் இடம் பெறுவதை முறைப்படுத்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,’ என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரியில் ஓடிடி.யில் வெளியான, ‘தாண்டவ்’ என்ற வெப் தொடரில், உபி மாநில போலீஸ், இந்து தெய்வங்கள், பிரதமர் கேரக்டரை இழிவுபடுத்தியதாக, அந்த தொடரை வெளியிட்ட அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய தலைமை அதிகாரி அபர்ணா புரோகித், இயக்குனர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் அபர்ணா புரோகித், முன்ஜாமீன் மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதி அசோக் பூஷண் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அபர்ணா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிட்டார். அதன் பிறகு நீதிபதிகள், இந்தி திரைப்பட துறையில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதனால், இந்திய சமூகம், மதம், இனம் மிகப் பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும். சில ஓடிடி தளங்களில் ஒரு சில குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல், எப்போதும் ஆபாச படங்கள் இடம் பெறுகின்றன. சில குறிப்பிட்ட வகையான இந்த ஆபாச படங்களை முறைப்படுத்த, மத்திய அரசு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories:

>