×

உள்நாட்டில் தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஏன்?: மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கேள்வி

புதுடெல்லி: ‘குறிப்பிட்ட சில பிரிவு மக்களுக்கு மட்டுமே கெரோனா தடுப்பூசி போடுவது ஏன்?’ என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டது. இதில், முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உருவான உருமாறிய கொரோனா வைரசும், இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், நீதித்துறையில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘நீதிமன்றங்களில் வரும் 15ம் தேதி முதல் வழக்கு விசாரணைகள் நேரடியாக நடைபெற உள்ளன. இதனால், மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமாக நீதிமன்றம் உள்ளது. எனவே, நீதித்துறை பணியில் உள்ள வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள் போன்றவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியில் போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில், வயது வரம்பு, உடல்நலக் கோளாறுகள் குறித்த வரையறையை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா அமர்வு, ‘குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதற்கான வரையறை எப்படி முடிவு செய்யப்பட்டது?  நமது நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசியை போடாமல்,  வெளிநாடுகளுக்கு விற்றும், இலவசமாக கொடுத்தும் வருவது ஏன்? கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், சீரம் நிறுவனங்களின் உற்பத்தி மொத்த திறன் எவ்வளவு? போன்ற விவரங்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயமே தேவையில்லை
சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை தொடர்ந்து, முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஜனாதிபதியும் போட்டு கொண்டார். இந்நிலையில், டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய மனைவி குர்சரண் கவுர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது, கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், ‘‘எனக்கு 52 வயது. நீரிழிவு பாதிப்பு இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தகுதியுள்ள அனைவரும் பயமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்,’’ என்றார்.

முதியோருக்கு முதலில் சிகிச்சை
கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால், முதியோர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு தனியார் மருத்துவமனைகள் தயக்கம் காட்டி வருகின்றன. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சிகிச்சைக்கு வரும் முதியோர்களை முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்,’ என தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக 3 வாரங்களில் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

Tags : Delhi ,Central Government , Domestic, Vaccine, Abroad, Delhi iCourt
× RELATED டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டம்?