கேரளாவில் பாஜ முதல்வர் வேட்பாளர் மெட்ரோமேன்: மாநில தலைவர் சுரேந்திரன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: ‘கேரளாவில் பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக, ‘மேட்ரோமேன்’ என அழைக்கப்படும் ஸ்ரீதரன் நிறுத்தப்படுகிறார்,’ என இம்மாநில பாஜ தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மூளையாக செயல்பட்டவர். தற்போது இவருக்கு 83 வயது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கேரளாவில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பாக இவர் பாஜ.வில் இணைந்தார். அப்போது, கேரளாவில் பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தெரிவித்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இம்மாநிலத்தில் பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக பலர் போட்டி போட்டு வரும் சூழ்நிலையில், ஸ்ரீதரனின் முதல்வர் ஆசை குறித்து பாஜ சார்பில் இதுவரை யாரும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இக்கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் பாஜ வெற்றி பெற்றால் மெட்ரோமேன் ஸ்ரீதரனை முதல்வர் ஆக்குவோம். கேரளாவில் முடங்கியுள்ள வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், ஊழல் இல்லாத மாநிலமாக உருவாக்கவும் அவரால்  மட்டுமே முடியும். அதனால்தான் அவரை பாஜ.வின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்’’ என்றார். ஆனால், இது பாஜ மேலிடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பா என்பது உறுதி செய்யப்படவில்லை. சுரேந்திரனின் இந்த அறிவிப்பு, கேரளாவில் பெரும் பரபரப்பையும், அரசியல் வட்டாரத்தில் வியப்பையும் அளித்துள்ளது.

Related Stories: