அகமதாபாத் டெஸ்ட் மீண்டும் சுழலில் சிக்கிய இங்கிலாந்து: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்

அகமதாபாத்: இந்திய சுழல் பந்து வீச்சாளர்களின் சுழலில் மீண்டும் சிக்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 205ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.  இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக சிராஜ் களம் கண்டார்.  இங்கிலாந்து அணியில்  ஆர்ச்சர், ஸ்டூவர்ட்  ஆகியோருக்கு பதிலாக  லாரன்ஸ்,  பெஸ் ஆகியோர் களம் கண்டனர். டாஸ் வென்ற ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள்  ஜாக் கிரெவ்லி(9), டொமினிக் சிப்லி(2) ஆகியோரை அக்சரும், ஜோ ரூட்டை(5)  சிராஜூம் அடுத்தடுத்து வெளியேற்றினர்.  சிறிது நேரம் சமாளித்த  ஜானி பேர்ஸ்டோ 28, ஒல்லி போப் 29 ஆகியோரை முறையே சிராஜ், அஷ்வின்  ஆகியோர் பெவிலியனுக்கு அனுப்பினர். பொறுப்பாக விளையாடி தனது 24வது டெஸ்ட் அரைசதத்தை அடித்த பென் ஸ்டோக்சை 55ரன்னில் வாஷிங்டன் அவுட்டாக்கினார்.

 அடுத்து வந்தவர்களில் டேனியல் லாரன்ஸ்  46 ரன் விளாசினார்.  பென் ஃபோக்ஸ் 1, டொமினிக் பெஸ் 3, ஜாக் லீச் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 75.5ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 205 ரன் எடுத்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன்  10* ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில்  அக்சர் 4, அஷ்வின் 3, சிராஜ் 2, வாஷிங்டன் 1 விக்கெட் வீழத்தினர். அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.  ஆண்டர்சன் வீசிய  இன்னிங்சின் முதல் ஓவரின் 3வது பந்தில் ஷுப்மன் கில்  ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, புஜாரா இணை பொறுப்பாக விளையாட முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 12ஓவருக்கு ஒரு விக்கெட்டை இழந்து 24ரன் எடுத்துள்ளது. ரோகித் 8*, புஜாரா 15*ரன்னுடன் களத்தி–்ல உள்ளனர். ஒரு மெய்டன் விக்கெட் எடுத்த ஆண்டர்சன் தான் வீசிய 5ஓவரிலும் ஒரு ரன் கூட தரவில்லை. இந்தியா 181ரன் பின்தங்கிய நிலையில், இன்னும் 9 விக்கெட்கள் கைவசம் இருக்க 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடரும்.

Related Stories: