2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு

புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதிக்கு 2020-2021ம் நிதியாண்டிலும் தொடர்ந்து 8.5 சதவீதம் வட்டி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த மார்ச்சில் 2019-2020ம் நிதியாண்டுக்கான பிஎப் வட்டி விகிதம், 7 ஆண்டுகளில்  இல்லாத வகையில் 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, 2012-2013ம் ஆண்டில் இருந்து ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.

கடந்த ஓராண்டாக கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு,  ஏராளமான நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் வருங்கால வைப்பு நிதிக்கான வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது. எனவே, இந்த நிதியாண்டுக்காக பிஎப் வட்டி விகிதத்தில் கடுமையான மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் 2020-2021-ம் நிதியாண்டுக்கான மத்திய அறங்காவலர் குழு கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது. இதில், வருங்கால வைப்பு நிதிக்கு தொடர்ந்து 8.5 சதவீத வட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதுவே, 2016-2017ம் ஆண்டில் 8.65 சதவீதம், 2017-2018ம் ஆண்டில் 8.55 சதவீதம், 2015-2016ம் நிதியாண்டில் 8.8 சதவீத வட்டியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: