தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பெட்ரோல் பங்க்குகளில் உள்ள மோடி படத்தை நீக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையம் அதிரடி

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம் உட்பட 5 மாநிலங்களில், பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் இருந்து பிரதமர் மோடியின் படத்தை நீக்கும்படி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், அசாம், புதுவை மற்றும் கேரள மாநிலங்களில் இம்மாதம் 27ம் தேதி முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இம்மாநிலங்களில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பெட்ரோல் பங்க்குகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைககளில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு, மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இதை ஏற்று, நேற்று முன்தினமே மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்க்குகளில் உள்ள விளம்பர பலகைகளில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை அகற்றும்படி, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்பில், ‘ சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை உடனடியாக நீக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>