முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புடன்தான் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணையின் நீர் கொள்ளளவும், கட்டுமானமும் முழு பாதுகாப்புடன்தான் உள்ளது,’ என உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ‘முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு பாதிப்பும் வராமல் நடவடிப்பதற்காக, துணைக்குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து செயல்பட வேண்டும்,’ என 2018ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், கேரளாவை சார்ந்த ஜோசப் என்பவர் கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கண்காணிக்கவே பிரதான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. தற்போது, துணை குழுவும் கூடுதலாக அமைக்கப்பட்டு இருப்பதால், கண்காணிப்பு குழுவுக்கான அதிகாரங்கள் பிரித்து கொடுக்கப்படுகிறது.

இதனால், அணையின் பாதுகாப்பை கண்காணிப்பதில் சிக்கல் வருகிறது. அதனால், புதிதாக அமைக்கப்பட்ட துணைக்குழுவை கலைக்க உத்தரவிட வேண்டும்,’ என கோரியுள்ளார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மத்திய நீர்வள ஆணையமும் நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், ‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. முழு கொள்ளளவில் நீர் இருந்தாலும் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. அணையின் கட்டுமானமும் பாதுகாப்பாகவே உள்ளது. மேலும், அணையின் பாதுகாப்பை கண்காணிக்க அமைப்பப்பட்டுள்ள மத்திய அரசு மற்றும் தமிழக, கேரள மாநில குழுக்கள் இணைந்து, அணையை முறையாக ஆய்வு செய்து வருகின்றன,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>