×

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியிட அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இன்று வெளியாக உள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரை படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், என்னை நோக்கி பாயும் தோட்ட படத்திற்காக பட தயாரிப்பு நிறுவனமான எஸ்க்கேப் ஆர்டிஸ்ட்  எங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. படத்தை வெளியிடுவதற்கு முன்னால் 1கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை அந்த நிறுவனம் தந்துவிட்டது.

மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் ரூபாயை திரும்ப கொடுக்காமல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ளது.
எனவே, எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய மீதமுள்ள தொகையை  வட்டியுடன் செலுத்தும் வரை ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில்,  தயாரிப்பு நிறுவனம் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் நேற்று நீதிபதி பி.டி.ஆஷா முன்பு ஆஜராகி, ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.60 லட்சம் கொடுத்துவிட்டோம். மீதமுள்ள ரூ.82 லட்சத்து 34,846 ஜூலை 31ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் தந்துவிடுகிறோம் என்று கூறி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, ரேடியன்ஸ் மீடியா தரப்பு வக்கீல் படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை என்றார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags : Selvaragavan, the heart does not forget, iCord
× RELATED நடிகர் விவேக்கிற்கு முழுக்க முழுக்க...