பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு மக்கள் வாழ சிறந்த நகரம் சென்னைக்கு 4வது இடம்: பெங்களூரு முதலிடம்

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் சென்னைக்கு 4ம் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்பது குறித்து ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இதை நடத்துகிறது. இந்தாண்டில், நாடு முழுவதிலும் இருந்து 111 நகரங்கள் இந்த ஆய்வில் இடம் பெற்றன. தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை உட்பட 10க்கு மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம் பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    

இந்நிலையில், மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி நேற்று டெல்லியில் வெளியிட்டார். அதில் ‘10 லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்களின் பட்டியலில், சென்னையும், கோவையும் இடம் பெற்றுள்ளன. இதில், சென்னைக்கு 4வது இடமும், கோவைக்கு 7வது இடமும் கிடைத்துள்ளது. பெங்களூரு மாநகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களை பிடித்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயபுத்தூர், வதோதரா, இந்தூர், மும்பை ஆகியவை இடம் பெற்றுள்ளன. நாட்டின் தலைநகரமான டெல்லி, 13வது இடத்தை பிடித்துள்ளது.

Related Stories: