×

இட ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் அதிமுக அரசை கண்டித்து 68 சமூகத்தினர் போராட்டம்

* கம்பத்தில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு
* அதிமுக கொடிக்கு தீவைப்பு வீடியோ வைரல்

கம்பம்: வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கம்பத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில், தெருக்களில் கருப்புக்கொடி கட்டி அதிமுகவை வீழ்த்துவோம் என வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கண்டித்து தமிழகம் முழுவதும் பிற சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ேதனி மாவட்டம், கம்பத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கவுதமன், மாநில இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், மாநில மாணவரணி துணை செயலாளர் கவியரசன் உட்பட  சீர்மரபினர் அமைப்பினர் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி அதிமுக அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் சீர்மரபினர் மக்களின் உரிமையை அழித்தவர்கள், ஏமாற்றியவர்கள் என முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களின் படங்களைப் போட்டு அதிமுகவை வீழ்த்துவோம் என துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக வழங்கி வருகின்றனர். துண்டு பிரசுரத்தில், ‘‘சீர்மரபினர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் என்று கூறி தொடர்ந்து ஏமாற்றுகிறது மத்திய, மாநில அரசுகள். சீர்மரபினர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இட ஒதுக்கீட்டை மாற்று சமூகத்திற்கு தாரை வார்த்த அதிமுகவை தேர்தலில் வீழ்த்துவோம். கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளரை படுதோல்வி அடைய செய்வோம்’’ என கூறப்பட்டுள்ளது.  இந்த துண்டு பிரசுரத்தை முக்கிய இடங்களில்  ஒட்டியுள்ளனர்.

 தூத்துக்குடி மாவட்டத்தில்: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டத்தில், வெள்ளூர், கால்வாய், காரசேரி ஆகிய கிராமங்களின் எல்லைகளில் மக்கள் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது குறித்து சீர்மரபினர் உரிமை மீட்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சீனி பாண்டியன் கூறுகையில், ‘‘சீர்மரபினர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் யார் நின்றாலும் தோற்கடிப்போம்’’ என்றார்.

இதற்கிடையே அதிமுக கொடியை தீ வைத்து எரிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுகவின் கொடியை தரையில் நட்டு வைக்கும் ஒருவர் அதை பின்னர் தென்னை ஓலையில் தீ வைத்து எரிப்பது போன்ற வீடியோ பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சிவகிரியில் தேவர் மகா சபையினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  பாளையங்ேகாட்டை முருகன்குறிச்சியிலுள்ள இரு தெருக்கள், கோட்டூர் பசும்பொன்நகர், முன்னீர்பள்ளம் பெருமாள் கோயில் தெரு ஆகியவற்றில் கருப்புக் கொடி கட்டி முக்குலத்தோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : AIADMK , Reservation, Viswaroopam, AIADMK, Community Struggle
× RELATED அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார்...